தேர்தலில் தோல்வியடைந்தாலும் சாதித்து காட்டிய சி.வி.சண்முகம்! கொண்டாடும் கூட்டணி கட்சியினர்
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வருகிறார்.ஏற்கனவே இரண்டு முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் இந்த முறை ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இவர் தோல்வி அடைந்ததது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக தரப்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.அதே போல ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்தது.அதில் ஒன்று தான் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் மக்களின் ஆதரவை பெறுவது.
இதை அடிப்படையாக கொண்டு தான் வன்னிய சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு இறுதி நேரத்தில் வழங்கப்பட்டது.இதற்கு கோரிக்கை வைத்தது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் என்று அறியபட்டாலும், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எந்த விதமான சட்ட சிக்கலுமின்றி நிறைவேற்றியதில் சட்ட அமைச்சராக பதவி வகித சி.வி.சண்முகம் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது என பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த திமுக புதியதாக பதவியேற்றுள்ள நிலையில் உள் ஒதுக்கீடு தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற அச்சம் வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் நிலவி வந்தது.இந்நிலையில் திமுக ஆட்சியில் வெளியாகியுள்ள அம்பேத்கார் சட்ட பல்கலை கழகத்தின் அறிவிப்பில் வன்னியர்களுக்காக வழங்கப்பட்ட MBC(V) பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து திமுக அரசும் இந்த உள் ஒதுக்கீட்டை ஏற்று கொண்டது என்பது இதன் மூலமாக உறுதியாகிறது.அந்த அளவிற்கு சட்ட நுணுக்கங்களுடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பாக இந்த விவகாரத்தை கையாண்டுள்ளார் என அதிமுக மற்றும் பாமகவினர் அவரை பாராட்டி வருகின்றனர்.சி.வி.சண்முகம் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் இந்த இட ஒதுக்கீடு மூலமாக தமிழக அளவில் மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்று கூட்டணி கட்சியினர் புகழ்ந்து வருகின்றனர்.