வாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன?

0
150

வாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன?

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆம்பன்’ என இந்த புயலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைத்திருக்கும் இது, இன்று மாலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ‘ஆம்பன்’ புயல் நகர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “வங்கக் கடலில் நாளை (சனிக்கிழமை) ‘ஆம்பன்’ புயல் உருவாக வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

இதை தொடர்ந்து, நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளது. இது மே 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும், 18 ஆம் தேதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்வதால் 18, 19 ஆகிய தேதிகளில் மணிக்கு 75 -85 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மணிக்கு 95 கிமீ வேகம் வரை காற்று வீசும்.

எனவே, அந்த சமயங்களில் தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்றார்.

‘ஆம்பன்’ புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் கரையைக் கடக்காது என்று சொல்லப்படுகிறது. இது, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி பயணிக்கவிருப்பதால் ஒடிசா அல்லது வங்கதேசத்தில் இது கரையைக் கடக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்த வரை இந்த புயலால் பெரிய அளவில் மழை இருக்காது என்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.