Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதீனத்தை நடந்து செல்ல வைத்த திராவிடர் கழகத்தினர்:பல்லக்குப் போராட்டம் வெற்றி!

ஆதீனத்தை நடந்து செல்ல வைத்த திராவிடர் கழகத்தினர்:பல்லக்குப் போராட்டம் வெற்றி!

பட்டினப்பிரவேசம் என சொல்லப்படும் பல்லக்கில் வைத்து ஆதீனத்தைத் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிக்கு எதிராக போராடி பெரியாரியவாதிகள் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் மடத்தின்  27 ஆவது ஆதீனகர்த்தராக மாசிலாமணி தேசிக சம்மந்தர் பொறுப்பேற்றுள்ளார். இதனை முன்னிட்டு இவர் அந்த ஆதினத்தின் ஆளுகைக்குள் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பனந்தாள் வந்து வழிபட்டார். அவர் செல்லும் கோயில்களில் எல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பட்டினப் பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து திருவீதிகளை சுற்றி கோயிலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்வாறு சென்ற அவர் மக்களுக்கு ஆசி வழங்கினார்.

இதன் அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் பிப்ரவரி 12ஆம் தேதி பட்டினப் பிரவேசம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மனிதனை மனிதனே சுமந்து செல்லும் இந்நிகழ்வுக்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து திருப்பனந்தாள் கடைவீதிகளில் திராவிடர் கழக அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், நீலப்புலிகள் அமைப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த செய்தி அறிந்த ஆதீனம் நடந்தே செல்வதாகவும் பல்லக்கு வேண்டாம் எனவும் தெரிவித்தார். இந்த தகவல் காவல் துறையினர் மூலம் போராட்டக்காரர்களை அடைந்தது. போராட்டக்காரர்கள் இதைக் கேட்டு ‘பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, ஆதீனத்துக்கு நன்றி’ என முழக்கமிட்டுக் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பனந்தாள் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

Exit mobile version