கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக எம்பிக்கள் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கொரோனா நிவாரண உதவிக்காக திமுக நடத்திய ஒன்றிணைவோம் வா திட்டத்தின் வழியாக பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை திமுகவை சேர்ந்த தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்பிக்கள் தலைமை செயலாளர் சண்முகத்திடம் கொடுத்தனர். இந்த நிகழ்வின் போது திமுக எம்பிக்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது திமுக எம்பி தயாநிதிமாறன் தலைமை செயலாளர் சண்முகத்தின் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை முன் வைத்தார். அப்போது அவர் தலைமை செயலாளரை விமர்சனம் செய்வதாக எண்ணி நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? என்று கேள்வி எழுப்பினர்.சாதி ஒழிப்பு மற்றும் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் திமுகவிடருந்து இப்படி ஒரு விமர்சனத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவே முடியாது. குறிப்பாக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தலித் ஆதரவுடைய கட்சிகளை கூட்டணியில் வைத்து கொண்டு தயாநிதிமாறன் இவ்வாறு தாழ்த்தப்பட்ட மக்களை புண்படுத்தும் வகையில் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதில் “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சி என்பதால் தாழ்த்தப்பட்ட மக்களை புண்படுத்தும் வகையில் பேசியிருந்தும் திருமாவளவன் இதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் திமுக மற்றும் விசிக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து மீம்ஸ் மற்றும் கார்ட்டூன்கள் வெளியாகின.
இதில் தலித் தலைவர்கள் திமுக தலைவரின் காலில் விழுந்து அவரின் ஷூவை நாக்கால் நக்குவது போல வெளியான கார்ட்டூன் கடும் சர்ச்சையை எழுப்பியது.குறிப்பாக இது சாதிய கண்ணோட்டத்துடன் வெளியிட்டதாகவும் தலித் ஆதரவு அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.இதனையடுத்து Varma cartoonist-வர்மா கார்ட்டூனிஸ்ட் என்ற பெயரில் வெளியான இந்த கார்ட்டூனை வெளியிட்ட நபரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த கால தமிழக அரசியல் வரலாற்றில் கார்ட்டூனில் மோசமாக சித்தரிக்கப்படாத அரசியல் தலைவர்கள் என்று யாருமேயில்லை. இந்திய பிரதமர் மோடி,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் மற்றும் பிரபல அரசியல் தலைவர்களான பாமகவின் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ்,நாம் தமிழர் கட்சியின் சீமான் என அனைவரையும் தங்களுடைய கற்பனைக்கு ஏற்ப படு மோசமாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக சமீபத்தில் தமிழக முதல்வரையே ஆடையில்லாமல் கார்ட்டூன் வரைந்து வெளியிட்டனர். அப்போதெல்லாம் இதை வரைந்தது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஆதரவு பெற்றவர்கள் என்று தெரிந்திருந்தும் இதை கருத்து சுதந்திரம் என்று அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் பெருந்தன்மையோடு கடந்து சென்றனர்.
ஆனால் தற்போது தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறனை கண்டிக்காத தலித் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் உண்மையை கார்ட்டூன் வரைந்து வெளிப்படுத்தியதை பெரும்பாலோனோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் தலித் ஆதரவு அரசியல்வாதிகள் இதை சாதிய கண்ணோட்டத்துடன் அணுகி அவரை கைது செய்திருப்பது படைப்பாளிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கூட்டணி கட்சியின் எம்பி தயாநிதிமாறன் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை ஏற்று கொண்ட இவர்கள் அதை கண்டுக்காமல் போனவர்களை குறித்து கார்ட்டூன் வெளியிட்ட நபர் மீது குற்றம் சாட்டுவது ஏன்?
தலித் ஆதரவு படைப்பாளிகள் எழுதுவதை கருத்து சுதந்திரமாக ஏற்று கொள்ளும் இவர்களுக்கு மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் எழுதுவது மட்டும் எப்படி சாதிய அவமதிப்பாக தெரிகிறது, தலித் ஆதரவு என்ற போர்வையில் ஒருதலைப்பட்சமாக இந்த அரசியல் கட்சி தலைவர்கள் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை தொடர்ந்து நசுக்கி வருவதாகவும், கேள்விக்குறியாக்கி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
தமிழக அரசின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
பிரதமர் மோடிஜி அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்து கண்காட்சி நடத்திய லயோலா கல்லூரி முதல்வரை கைது செய்யாத காவல்துறை திருமாவளவனின் திமுக அடிமை தனத்தை சித்தரித்து கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையில் திமுக கருப்பாடுகள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்த முகிலனை கைது செய்யாத காவல்துறை திருமாவளவனை விமரிசித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்தது ஏன்? காவல்துறையில் உள்ள திமுக கருப்பாடுகளை அரசு அடையாளம் காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அவர் பதிவிட்டுள்ளார்.