திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய தயாநிதிமாறன்! அதிருப்தியில் திமுக தலைவர் ஸ்டாலின்
கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி வருகிறது. அதே போல திமுக தலைமையில் ஒன்றிணைவோம் வா மூலமாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசுக்கு கோரிக்கை வைக்கும் திட்டத்தை தொடங்கினர்.
இவ்வாறு திமுகவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தி.மு.க. எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். இவ்வாறு இந்த மனுக்களை தலைமை செயலாளரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை வைத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தலைமை செயலாளர் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு கோரிக்கை மனு அளிக்க வந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாற்றியுள்ளார்.மேலும் “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்றும் அவர் உணர்ச்சிவசமாக விமர்சித்துள்ளார்.
சாதி ஒழிப்பு மற்றும் பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பதாக திமுகவினர் பேசி வரும் இந்த நிலையில் தயாநிதி மாறனின் இந்த சாதி அடிப்படையிலான பேச்சு, உயர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஜாதி வெறி,சாதிய பாகுபாடுகளை அவர்கள் இன்னும் மறக்கவில்லைஎன்பதையே உணர்த்துகிறது. மேலும் சம்பந்தமேயில்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்புபடுத்தி தயாநிதிமாறன் பேசிய இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆரம்பம் முதலே கொரோனா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றசாட்டுக்களை கூறி வருவது மக்கள் மத்தியில் அரசியலாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறிவரும் நிலையில் திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் மக்களை சந்திக்க ஆரம்பித்தது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக காட்டிக்கொள்ளும் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் வைத்து கொண்டே தயாநிதிமாறன் இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது திமுகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமை செயலாளரை சந்திக்க சென்ற நோக்கத்தை மறந்து சாதாரண பிரச்சனையை பெரிதாக்கி கட்சிக்கும் பின்னடைவு ஏற்படுத்தியதால் திமுக எம்பி தயாநிதிமாறன் மீது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.