Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேற்று மாலையுடன் முடிந்த காலக்கெடு! மொத்தம் எத்தனை பேர் தேர்வு!! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

நேற்று மாலையுடன் முடிந்த காலக்கெடு! மொத்தம் எத்தனை பேர் தேர்வு!! இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. எனவே, டோக்கன் வழங்கி வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே வேட்புமனு தாக்கல் தொடங்கியதால், ஆரம்பத்தில் வேட்பு மனுதாக்கல் மிகவும் மந்தமாகவே இருந்தது.  இதையடுத்து கடந்த 2-ந் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் விறுவிறுப்படைந்தது. நேற்று முன்தினம் மட்டும் 27 ஆயிரத்து 365 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக குவிந்தனர். அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் ஒரே நேரத்தில் திரண்டதால் வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்கள் களைகட்டின.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், கூட்டம் கூடும் எனக் கருதி கூட்டத்தை கட்டுப்படுத்த வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 5 மணிக்கு முன்னதாக வந்த வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்பிறகு அவர்களின் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

நேற்று மட்டும் 27 ஆயிரம் பேர் வரை வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக தோ்தல் கமிஷன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர், முன் மொழிபவர் அல்லது வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் என யாராவது ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version