குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் மனைவி பகிரங்க புகார்!
கடந்த மாதம் 2-ந் தேதி மும்பையில் இருந்து கோவாக்கு சென்ற சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இருந்தது குறிப்பிடத் தக்கது. அவர் உள்ளிட்ட சிலரும் போதைப்பொருள் பயன்படுத்தியது ஆதாரத்தோடு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
அதை தொடர்ந்து, ஆர்யன் கானை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சமீர் வான்கடே ஆகும். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து சமீர் வான்கடேவை குறி வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்யன் கானை திட்டமிட்டு இந்த சதிவலையில் சிக்கவைத்துள்ளனர் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியான சமீர் வான்கடே போலியான சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளார் என அவர் மீதும் தற்போது நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார். சமீர் வான்கடே ஒரு முஸ்லீம் என தெரிவித்துள்ள நவாப் மாலிக், போலியான ஜாதி சான்றிதழை பயன்படுத்தி பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீட்டின் காரணமாக போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இணைந்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதை தொடர்ந்து ஒரு ஜாதிச்சான்றிதழையும், சமீர் வான்கடேவின் திருமண புகைப்படத்தையும் நவாப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். நவாப் மாலிக்கின் கருத்துக்கு நேற்று அறிக்கை மூலம் பதிலளித்திருந்தார் சமீர் வான்கடே. அதில் நான் பல மதங்களை கொண்ட மதச்சார்பற்ற குடும்பத்தை சேர்ந்தவன். எனது தந்தை இந்து, தாயார் முஸ்லீம். எனது தனிப்பட்ட ஆவணங்களை டுவிட்டரில் வெளியிடுவது அவதூறானது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தின் தனியுரிமைக்கும் எதிரானது. நவாப் மாலிக்கின் அவதூறு தாக்குதலால் வேதனையடைந்தேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடேவின் மனைவி ஹரந்தி ரெக்கர் வான்கடே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவில் முறைகேடுகள் நடத்துள்ளதாகவும், நவாப் மாலிக் வெளியிட்டுள்ள கடிதத்திற்கு எந்த வித மதிப்பும் கிடையாது என்றும், கூறினார்.
எனது கணவர் தவறு ஏதும் செய்யவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் கூறினார். எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் நபர்கள் தான் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். நாங்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் அல்ல. நாங்களும் உங்களை போல் சாதாரண மக்கள் தான். சமீர் மிகவும் நேர்மையான அதிகாரி.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு பதவியில் இருந்து சமீர் நீக்கப்படவேண்டும் எனவும் நிறையபேர் நினைக்கின்றனர். மேலும் எனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறது. அதன் காரணமாக எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் தற்போது உள்ள பதவியில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டால் பலர் பயனடைவார்கள் என நினைக்கிறேன் என்றும் கூறினார்.