திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ்

0
139

திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போராடி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் சில குறிப்பிட்ட மக்களை அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சென்னைக்கு வெளியே இடம் பெயர அரசு வலியுறுத்தி வருகிறது.

சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தம் செய்வதற்காகக் கூறி அதன் கரையோரங்களில் வாழ்ந்து வரும் பெரும்பாலான குடும்பங்களை சென்னை மாநகராட்சி அகற்றி வருகிறது. சென்னை அண்ணா சாலைக்கு அருகிலுள்ள அன்னை சத்தியவாணி முத்து நகர் பகுதிகளில் தினக் கூலித் தொழிலாளர்கள், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 2,092 குடும்பங்கள் வசித்து வருகிறது. அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், நாளை உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம். அதற்குள் வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்து விட்டு சென்றிருக்கின்றனர்.

அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் அங்கிருந்து இடம்பெயர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்குள் நுழைந்த அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியுடன் அங்குள்ள வீடுகளை இடிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் அவர்களது குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கும் படிப்பதால்,அவர்களுக்கு இன்னும் ஐந்து மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடைபெறவுள்ளது என்றும், தற்போது காலி செய்தால் அந்த குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். ஆகவே, மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை அங்குள்ள வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது காலங்காலமாக தொடரும் பிரச்சனை என்பதால், அரசு அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்ளாமல் மேலும், அவர்களை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டேன். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஏப்ரலில் முழு ஆண்டுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து 50 கிமீ அப்பால் பெரும்பாக்கம் பகுதிக்கு விரட்டியடித்தால் அம்மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்பதைச் சொல்லி ஆவேசப்பட்டனர்” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அப்பகுதி மக்களின் துயரத்தையும் கோரிக்கைகளையும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறிய திருமாவளவன், “சில நிமிடங்கள் கழித்து துணை முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு முழு ஆண்டுத் தேர்வு வரையில் தற்காலிகமாகக் குடியிருப்புகள் அகற்றம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். அவருக்கும் தமிழக அரசுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் இது குறித்து கூறியுள்ளார்.