குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!!

0
102

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!!

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வந்தது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. எனவே, தொற்றின் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. மத்திய அரசும் அவ்வப்போது இந்த தொற்றின் பாதிப்பு குறித்தும், அதை கட்டுபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வந்தது.

அந்த வகையில், கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் உள்துறை செயலாளர் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், தற்போது தொற்றின் பரவல் குறைந்து வருவதால் உள்ளூர் நிலைமையை கவனமாக ஆராய்ந்து அந்தந்த மாநிலங்களில் தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்க உத்தரவிட்டிருந்தது.

எனினும், நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வந்தாலும், கேரளாவில் இதன் தாக்கம் குறையாமலேயே இருந்து வந்தது. இதன் காரணமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அந்த மாநிலத்தில் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரானின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக கேரளாவில் குறைந்து கொண்டு வருகிறது.

எனவே, கேரளாவில் தொற்றின் பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு கூடுதல் தளர்வுகளை அறிவித்து உள்ளது. அந்த வகையில், உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றில் 100 சதவீத அளவு இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது நிகழ்ச்சிகளில் 1,500 பேர் வரை கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.