‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ – அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்.

0
144

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடந்த இரு தினங்களாக வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தாலும், போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், ‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில், மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள, டில்லி ராஜ்காட்டில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்., தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், அரசியல் சாசனத்தின் அறிமுகவுரையை படித்தனர். கட்சியின் மற்ற மூத்த தலைவர்கள், தொண்டர்களும், அதை திரும்ப கூறினர்.

இந்த போராட்டம் குறித்து, கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது “மத்திய அரசின் மோசமான திட்டங்களால், நாடு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.குடியுரிமை சட்டம் உள்பட அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம் என்பதை உறுதி படுத்த இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அரசியல் சாசனம், மக்களுக்கு அளித்துள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. மஹாத்மா காந்தியின் அஹிம்சை வழியில், புனிதமான அரசியல் சாசனத்தை பாதுகாக்க, சர்வாதிகார அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத், ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோனி, அஹமது படேல், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, திக்விஜய் சிங், மீரா குமார் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பல்வேறு மதத் தலைவர்களும் பங்கேற்றனர்.

”போராட்டங்களின்போது நடந்த வன்முறையில் உயிரிழந்தோருக்காக, இந்த போராட்டம் நடக்கிறது,” என, கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா கூறினார்.