Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவர்கள் மறுத்தால் என்ன? கெத்து காட்டும் முதலமைச்சர்!

தலைநகர் டெல்லியில் வருடம் தோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெறும் அவ்வாறு நடைபெறும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் சார்பாக அந்தந்த மாநில பெருமைகளை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழக அரசின் சார்பாக அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெறாது என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றுமுன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, உடனடியாக பிரதமர் தலையிட்டு தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார். இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று பதில் அனுப்பி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதனடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குடியரசுதினவிழா அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும், நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு இந்த வருடம் இந்தியா 75 என்ற தலைப்பின்கீழ் நடைபெற இருக்கிறது என கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற வேண்டி விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றும் விதத்தில் அலங்கார வாகனம் வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வு குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு 3 முறை அவர்கள் கூறிய திருத்தங்களை மேற்கொண்டு 4வது கூட்டத்திற்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் அழைக்காமல், அது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், தற்போது நம்முடைய உரிமை நிராகரிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக என்னுடைய வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்திருந்தேன். அந்த வகையில் இன்று கிடைக்கப்பெற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில் எந்தவிதமான காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும், ஏற்படுத்துகிறது என கூறியிருக்கிறார்.

நாட்டின் வேறு எந்த ஒரு மாநிலத்திற்கும் சற்றும் சளைப்பில்லாத விதத்தில் விடுதலைப் போரில் தமிழகம் செய்த 250 ஆண்டு கால தொடர் பங்களிப்பு போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும். முதல் இந்திய சுதந்திரப் போர் என்று போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்த வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய ஆரம்பமாகும்.

அதேபோல ஜான்சிராணி வாள்வீசுவதற்கு முன்பாகவே ஆங்கிலேயர்களை தீவிரமாக எதிர்கொண்டு போரிட்டு தன் நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலுநாச்சியார் என்று குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு எதிராக பலமுறை போரிட்ட புலித்தேவன், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம் மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணற்ற வீரத்திருமகன்களை விடுதலை தியாகத்திற்கு தந்த மண் தமிழ்நாடு ஆகும் என்று குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர்.

ஆங்கிலேயர்கள் உடைய வணிகத்திற்கு போட்டியாக சுதேசி கப்பல் கம்பெனி என பெரும் கனவை நெஞ்சில் சுமந்து தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழந்து அடக்குமுறைக்கு எதிராக செயல்பட்டு இரட்டை தீவாந்தர தண்டனை பெற்றவர் வ உ சிதம்பரனார், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தன்னுடைய வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார், இது போன்ற விடுதலைப் போராட்ட தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூறும் விதமாக தான் நம்முடைய அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது என கூறியிருக்கிறார்.

ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்கொண்ட நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்று கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், நாட்டுப்பற்றும் விடுதலை வேட்கையும் தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பாக நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி பொதுமக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் ,அதோடு சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்பட கண்காட்சியை நாட்டின் மற்ற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version