டெண்டர் முறைகேடு! எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடத்தும் உச்சநீதிமன்றம்!

0
138

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கடந்த 2011 முதல் 2016 வரையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

பின்னாளில் கடந்த 2016இல் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் கூட நெடுஞ்சாலைத்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை மற்றும் சாலை சீரமைப்பு பணிக்காக டெண்டர் வழங்கியதில் சுமார் 4800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக திமுகவைச் சார்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க சென்ற 2018 ஆம் வருடம் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல எடப்பாடி பழனிச்சாமியும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த சமயத்தில் சிபிஐ விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்க்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கும் நிலுவையிலிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக இன்றைய தினம் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

இந்த டெண்டர் முறைகேடு புகார்தெழுந்த சமயத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அவருடைய உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு, அவர் டெண்டர் வழங்கி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து திமுக சார்பாக அவர் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.