உயர் கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கு முன்னுரிமை! உயர் கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள வன்னிய சமூகத்திற்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டுமென பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.இதனையடுத்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் போராட்டத்தை அறிவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், குறைந்தபட்சம் ஏற்கனவே உள்ள எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். அப்படி செய்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்பதையும் அதிரடியாக அறிவித்தார்.
இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் இறுதி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரச கதியில் இதற்கான சிறப்பு கூட்டத்தை கூட்டினார். இதில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் இதை தேர்தல் நேர நாடகம் என்றும், ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டமாகும் என்றும் விமர்சித்தன. ஆனால் ஒரு சில தினங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, மிக பிற்படுத்தப்பட்ட/சீர்மரபினருக்கு 20%, பட்டியலினத்தவருக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என மொத்தம் 69% இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில், ‘எம்பிசி-வி’ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. 20% இடஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு ஆகும்.வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.ஆனால் அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.