கோடிக்கணக்கில் பணத்தை கொட்டினாலும் கோவையில் தாமரை தான் மலரும் – வானதி சீனிவாசன்!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அவரின் வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நேர்மையான மற்றும் திறமையான ஆட்சியை தந்துள்ளதால், மக்கள் அனைவரும் மோடி மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர். கிராமம் மற்றும் நகரங்களில் பாஜகவிற்கு ஒரே மாதிரியான ஆதரவு கிடைக்கும். அதேபோல் அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு கோவையில் பாஜக மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தேர்தல் செலவுகளுக்காக பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பொய் புகார் கூறி வருகிறார்கள். திமுக அதிமுக கட்சிகள் வெளிப்படையாக பணப்பட்டுவாடா செய்து வருகிறார்கள். இதுகுறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.
அதுமட்டுமல்ல திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வது வெளியே தெரியாமல் இருக்க ஆட்களை ஏற்பாடு செய்து பாஜக பணம் கொடுப்பது போல திசை திருப்பி விடுகிறார்கள். இந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறுவார். 400 எம்பிக்களில் அண்ணாமலையும் ஒருவராக இருப்பார். எனவே கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் பாஜக தான் மலரும்” என கூறியுள்ளார்.