Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அரசியல்வாதிகளை எச்சரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் என பலர் மத்திய, மாநில, அரசுகளின் சின்னங்களை தவறாக தங்களுடைய வாகனங்களில் பயன்படுத்துவதாக தெரிய வந்ததால் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

அரசு சின்னங்களை அனுமதி இன்றி தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதற்கான உத்தரவு காவல்துறைக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அரசு விதிகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அதிகாரிகள் இவர்களைத் தவிர வேறு யாரும் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது. அதோடு முன்னாள் அமைச்சர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் தங்களுடைய வாகனங்களில் முத்திரை மற்றும் லட்டர் பேடு, விசிட்டிங் கார்ட், உள்ளிட்டவற்றில் இருக்கும் அரசு சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

இது தொடர்பாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் வழங்கலாம், தவறாக பயன்படுத்தப்படும் அரசு சின்னங்களை சாட்சிகளின் முன்னிலையில் பறிமுதல் செய்யவும், அந்த நிகழ்வை காணொளி மூலமாக பதிவு செய்யவும், காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது என்று காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version