தமிழ்த் திரையுலகில் எத்தனைப் படங்கள் வந்தாலும், மக்கள் மனதில் சில படங்கள்தான் நீங்காத இடம் பிடித்திருக்கும். அந்த வகையில், 2024-ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “மகாராஜா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை இயக்குனர் நித்திலன் இயக்கியுள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் ரூ. 100 கோடிக்கு அதிகமாக வசூலாகிப் பெரும் சாதனையைப் படைத்து வெற்றி பெற்ற படமாகும்.
ஓடிடி தளத்திலும் இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படத்தை அலிபாபா குழுமம் சீன மொழியில் டப்பிங் செய்து 40,000 திரையரங்குகளில் வெளியிட்டு இருக்கின்றது. இது இந்தப் படத்தின் மேலும் ஒரு சாதனையாக அமைந்திருக்கிறது. இதற்குமுன் சீனாவில் அமீர்கான் நடிப்பில் வெளியான “டங்கல்” திரைப்படம்தான் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளிவந்ததன் மூலம் சீன ரசிகர்களால் இந்தப் படம் வரவேற்கப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “மகாராஜா திரைப்படம் சீனாவில் மிகப் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த சாதனையை எண்ணி நாம் நிச்சயமாக பெருமைப்பட வேண்டும். இந்தப் படம் சீனாவிலும் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நான் நம்புகிறேன். நடிகர் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .மேலும், இந்தப் படம் எல்லையைத் தாண்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுதன் மற்றும் படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.