திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனம்… ஆனால் ஒரு கண்டிஷன்!!

0
116

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து கடந்த ஜூன் 11ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்தன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் இலவச டோக்கன்கள் வழங்க தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நாளொன்றுக்கு 3000 பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும்,
அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தரிசனத்துக்கு முந்தைய தினமே டோக்கன் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.