பெரம்பலூர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தாமதமாக வந்த மாவட்ட ஆட்சியர்.! கட்சிப் பிரமுகர்கள் விபரீத முடிவு.!

0
127

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால் கட்சிப் பிரமுகர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குதல், மற்றும் பெயர் சேர்த்தல், மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், வாக்குச்சாவடியின் முகவர் நியமனம் செய்தல், போன்ற திட்டமிடலுக்காக பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெறும், என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரே, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர், ஆனால் கூட்டம் ஆரம்பிப்பதாக சொன்ன நேரத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாகியும், மாவட்ட ஆட்சியர் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஆகையால், கோபம் அடைந்த அதிமுக நகரச் செயலாளர் ராஜபூபதி, மற்றும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், திமுக நகர செயலாளர் எம் பிரபாகரன், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

இது சம்பந்தமாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் பூபதி தெரிவித்தபோது, மாவட்ட ஆட்சியர் வேறு ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டத்திற்கு சென்றிருந்ததால், அக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்யும் கூட்டத்திற்கு வருவதற்கு நேரமாகிவிட்டது. ஆனால், அதற்குள்ளாக அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்தை புறக்கணித்து சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த கூட்டம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது என்று தெரிவித்தார்.