தமிழகத்தின் வட உள் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்றைய தினம் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கோயம்புத்தூர், சேலம், கடலூர், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
அதேபோல நாளையதினம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வரும் 17 மற்றும் 18 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது.
சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல், மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று காலை எட்டு முப்பது மணிக்கு உடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில், தலா 22 சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..களியலில் 20 சென்டிமீட்டர் மழையும், சுரளக்கோட்டில் 14 சென்டிமீட்டர் மழையும், பேச்சிப்பாறை, கன்னிமார் பகுதியில் தலா 11 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது.
மத்திய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும், அதாவது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேதத்திலும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் 18ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் ஆகவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.