தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த முறை குறிப்பிட்ட தொகுதிகளை வென்றால் மட்டுமே சின்னம், கட்சியை காப்பற்ற முடியும் என்பதால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜயகாந்தே பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 24ம் தேதி தன்னுடைய சென்டிமெண்ட் இடமான கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேமுதிக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பிரச்சார வேனில் அமர்ந்தபடி வாக்காளர்களைப் பார்த்து கையசைத்து வந்த விஜயகாந்த், யாருமே எதிர்பார்க்காத வகையில் இரு கையிலும் கட்டை விரல்களை உயர்த்தி புன்னகையுடன் வெற்றிச் சின்னத்தைகாட்டினார். அப்போது உற்சாகமடைந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விசில் அடித்தும், ஆராவாரம் செய்தும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் அந்த பகுதியே சிறிது நேரத்திற்கு பரபரப்பானது. மேலும் கேப்டன் விஜயகாந்த் கையில் முரசு சின்னத்தை வைத்துக் கொண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.