நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி?

0
181
DMK Activities in Lok Sabha Election 2019

நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி?

கடந்த 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த மக்களவை தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது பற்றிய அலசல் .

முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் இரண்டு பெரும் தலைவர்களும் இல்லாத சூழலில் அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் தமிழகத்தில் ஆட்சியே கவிழும் வாய்ப்பு இருந்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே தொடர திமுக தலைவர் ஸ்டாலின் வழிவகுத்து கொடுத்து விட்டார்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத ஸ்டாலின் எப்படியாவது ஆட்சி கவிழுமா? முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைக்குமா? என காத்திருந்த ஸ்டாலின் அதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இந்த விரக்தியில் அவர் கலந்துகொண்ட பெரும்பாலான கட்சி கூட்டங்களில் தொடர்ந்து எதாவது உளறுவதும் அது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாவதும் தொடர் கதையானது.

இந்நிலையில் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் ஆட்சி காலம் முடிவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி என்று கூறி வந்த ஸ்டாலின் திடீரென்று தேசிய அளவில் மூன்றாவது அணியை ஏற்படுத்துவது குறித்து மற்ற மாநில கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியலிலேயே தடுமாறிய ஸ்டாலின் தேசிய அரசியலில் மூன்றாவது அணியை ஏற்படுத்த முயன்றது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

அந்த சமயத்தில் தான் தனித்து போட்டியிடுவதாக கூறிய பாமக நிறுவனர் திமுக இல்லாதா காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட தயார் என்று அறிக்கை வெளியிட்டார். இதை சற்றும் எதிர் பார்க்காத ஸ்டாலின் மூன்றாவது அணியை மறந்து அவரச அவசரமாக வேறு எதையும் யோசிக்காமல் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை உறுதி செய்தார். இவ்வாறு பல குழப்பங்களுக்கு பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. மேலும் இக்கூட்டணியில் கம்யூனிஸ்ட்டு கட்சிகள்,மதிமுக மற்றும் விசிக போன்ற கட்சிகள் இணைந்து கூட்டணியை பலமாக்கின.

DMK Activities in Lok Sabha Election 2019

இவ்வாறு உருவான திமுக கூட்டணியின் செயல்பாடுகளில் சிறப்பானவைகளில் சில.

அதிமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தமிழகத்தின் பல கட்சிகளை ஒருங்கிணைத்து வலிமையான கூட்டணியாக அமைத்தது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீட்டை சுமூகமாக கையாண்டது.

திமுகவிற்குள் நிர்வாகிகளுக்கிடையே இருந்த உட்கட்சி பிரச்சனைகளை சமாளித்து அவர்களை தேர்தல் பணியாற்ற வைத்தது. மேலும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் வழக்கம் போல ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் இல்லை என்று கூறினாலும் அவரை பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது.

முக்கியமாக திமுகவின் கடந்த கால ஆட்சியில் பல்வேறு குற்றசாட்டுகள் மற்றும் ஊழல் புகார்கள் இருந்தாலும் அதையெல்லாம் ஊடகங்கள் மூலம் பொதுவெளியில் மக்களிடையே சென்றடையாமல் தமிழக ஊடகங்களை கட்டுபடுத்தியது.தொடர்ந்து தமிழக ஊடகங்கள் திமுகவிற்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடுமாறு பார்த்து கொண்டது.

இவ்வாறே இந்த கூட்டணியின் செயல்பாடுகளில் இருந்த குறைகள் சில

தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களை சந்திக்கும் விதமாக கடந்த காலங்களில் நடத்திய நமக்கு நாமே நடை பயணம் போல இந்த தேர்தலில் கிராம சபை கூட்டம் நடத்தியது தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகவே பார்க்கப்பட்டது.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு திமுக தொண்டர்களால் பொது வெளியில் நடத்தப்பட்ட அராஜகங்கள்.குறிப்பாக பிரியாணி கடையை அடித்து உடைத்தது,டீ கடை காரரை அடித்தது என திமுகவினர் செய்த அடாவடிகள் கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.

கூட்டணி விவகாரங்களில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்பார்க்காத ஸ்டாலின் விரக்தியில் வயதில் மூத்தவர் என்றும் பார்க்காமல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தரக்குறைவாக விமர்சித்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.

திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனை அவர் தொகுதியை தவிர்த்து வேறு எங்கும் பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லாமல் நவீன தீண்டாமையை கடைபிடித்திருக்கிறார்கள் என குற்றசாட்டுகள் எழுந்தது.

திமுக சார்பாக போட்டியிடும் துரைமுருகன் மகன் தொகுதியான வேலூரில் வாக்குக்கு பணம் கொடுத்ததாக கூறி தேர்தலை ரத்து செய்தது தேசிய அளவில் தமிழகத்திற்கும் திமுகவுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.

மேலும் பிரச்சாரத்தின் போது ஸ்டாலினின் பேச்சு, நடை மற்றும் அவருடைய உடை என எல்லாமே இயல்பாக இல்லாமல் தேர்தலுக்கான நாடகம் போலவே அமைந்தது.

இவ்வாறு பல நிறை குறைகள் உள்ள திமுகவின் தேர்தல் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் எவ்வாறு சென்றடைந்தது என்பதை வெளிவரயிருக்கும் தேர்தல் முடிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.