திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? ஓபிஎஸ் சரமாரி கேள்வி!

0
113

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டசபை தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இன்று என்ன நிலைமை என்று யோசித்தால், நகை கடன் வாங்கி இருப்போரில் கிட்டத்தட்ட 75% கடனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கையில் ஏற்கனவே பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விவரங்களை பகுப்பாய்வு செய்ததில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் நகை கடன் பெற தகுதி இல்லாதவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் 16 லட்சம் பயனாளிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுக்குப் பிறகு அதுவும் இரண்டரை லட்சம் குறைந்து விட்டது ,அதாவது தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் 18 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்திருக்க வேண்டிய நகை கடன் நிதி நிலை அறிக்கையில் 6000 கோடி என்று குறைக்கப்பட்டு, தற்சமயம் அது கிட்டதட்ட 4 ஆயிரத்து 500 கோடி என்ற அளவிற்கு வந்துவிட்டது. இதனை சரியாக கணக்கிடும் போது இதற்கான தொகை இன்னும் குறைவாகத்தான் உள்ளது. நகை கடன் தள்ளுபடி என்ற திமுக அரசின் இந்த அறிவிப்பு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கடனாளியாக ஆக்கியிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டு உள்ளார்கள் பகுப்பாய்வு தொடர்பாக எதற்காக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கவில்லை? பகுப்பாய்வு தொடர்பாக ஏன் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை? நகை கடனை வாங்க தூண்டும் விதத்தில் ஏன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது? என்ற கேள்விகள் தற்போது பொது மக்களின் மனங்களில் பூதாகரமாக எழுந்திருக்கின்றன.

இதுபோன்ற பகுப்பாய்வை மக்கள் மேற்கொண்டால் பகுப்பாய்வு செய்யும் உரிமையை திமுக இழக்கும் அதற்கான காலத்தை பொதுமக்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், விண்ணப்பம் செய்த எல்லோருக்கும் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்து அவர்களை சிரமத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.