வாரிசு அரசியல் சம்பந்தமான அவருடைய குற்றச்சாட்டிற்கு ஸ்டாலின் பதில் அளித்து பேசி இருக்கின்றார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அரசு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தினம் தொடங்கி வைத்தார் அப்போது அவர், நாடு முழுவதும் குடும்ப அரசியலுக்கு நாம் ஒரு நல்ல பாடத்தை புகட்டி வருகின்றோம். அந்தப் பாடம் தமிழகத்திலும் புகட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஊழலை பற்றி பேசுகின்றது ஊழலைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது 2ஜி உட்பட கோடிக்கணக்கான ஊழல்களை செய்தவர்கள் அவர்கள் அடுத்தவரை குறை சொல்லும் முன்பு அவர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கவேண்டும் என்று சாடி இருக்கின்றார்.
இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு நேற்றைய தினம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அமிர்ஷாவுடைய விமர்சனத்திற்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்து இருக்கின்றார். அந்த கடிதத்தில் திமுகவின் வெற்றி என்பது மக்களுடைய மனதில் மிகவும் ஆழமாக பதிந்து இருக்கின்றது அதை நம்மைவிட அதிகமாக ஆள்பவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் திமுக மீது அவதூறுகளை பரப்ப முயற்சித்து வருகிறார்கள். நமக்கு தொந்தரவு கொடுக்க நினைப்போர் அவர்களாகவே அம்பலம் ஆகிவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார் ஸ்டாலின்.
நாளொரு ஊழலும் பொழுது ஒரு கொள்கையாக அதிலும் தங்களுடைய குடும்பத்தினரை பினாமிகளாக வைத்து அரசு கஜானாவை கொள்ளையடித்து நான்கு வருட காலம் ஆட்சி செய்த இரட்டையர்களை அருகிலேயே வைத்துக்கொண்டு, டெல்லி உடைய சாணக்கியர்கள் மேடையில் பேசும் நேரத்தில் எதிர்கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை விதிக்கிறார்கள். அதோடு வாரிசு அரசியல் விமர்சனம் வைக்கிறார்கள் கண்ணாடி முன்பு நின்று கொண்டு கரடி பொம்மையின் விலை என்ன என்று கேட்ட நகைச்சுவை போல இருக்கின்றது என்று அமித்ஷாவை சாடியிருக்கிறார்.
நாட்டை வீணாக்கி தமிழகத்தை வஞ்சித்து வருகின்ற சக்திகளுக்கு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடியை கொடுத்தார்களோ அதை விட பலமான ஒரு தாக்குதலை 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வழங்குவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.