Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விலைவாசி உயர்வு! சென்னையில் அதிமுக நடத்திய மாபெரும் போராட்டம்!

விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது, உள்ளிட்ட திமுக அரசின் இது போன்ற செயல்களை கண்டிக்கும் விதத்தில், மாநில அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக அனைத்து வருவாய் மாவட்டங்களிலும், ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் நடைபெற்று இருக்கிறது. சென்னையில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டிக்கும் விதத்தில் , மளிகை, பொருட்கள், காய்கறி, உள்ளிட்டவற்றை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டு ஜெயக்குமாரும், அவருடன் இருந்த நிர்வாகிகளும், பங்கேற்றார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டிங்கிரிடிங்காலே, ஸ்டாலின் ஆட்சியின் டிங்கிரி டிங்காலே, தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் தங்கமே தில்லாலே, கொடுப்பதாக கொடுத்த வாக்கு என்னய்யா ஆச்சு, வாய்க்கு வந்த வாக்குறுதியை அளித்து நீங்க தக்காளி நிலையை பார்த்துவிட்டு கலக்குறாங்க அம்மா, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போறேதெல்லாம் சும்மா, என்பது உள்ளிட்ட பல்வேறு வரிகளை பாடலாக எழுதி அதனை பாடியபடி ஜெயக்குமார் கண்டனக் குரல் எழுப்பினார். அதன் பிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்திருக்கிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, மக்கள் விரோத விடியா அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற 8 மாதங்களில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியை கூட இதுவரை நிறைவேற்றவில்லை, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கல்விக் கடன் ரத்து, நீட்தேர்வு இருக்காது, என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள், எதையும் செய்யவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து இந்த அரசு மவுனம் சாதித்து வருகிறது. சட்டம் ஒழுங்கில் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார், மாணவ-மாணவிகளுக்கு ஒரு அரசு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது ? இது நெஞ்சை பிளக்கின்ற, பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அஞ்சுகின்ற செயலாக இருக்கிறது. புயல் மழை வறட்சி காலத்தில் ஓடோடி உதவி செய்த அதிமுக அரசை போல திமுக அரசு எதையும் செய்யவில்லை. ஆட்சியாளர்கள் பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பு வழங்காமல் அலட்சியத்துடன் இருக்கிறார்கள். அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுவதிலேயே குறியாக உள்ளார்கள் என கூறியிருக்கிறார்.

கருத்து சுதந்திரம் என்பது இந்த ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருக்கிறது திமுகவை சார்தவர்களையோ, திமுகவின் குடும்பத்தையோ, எதிர்த்தால் உடனடியாக குண்டர் சட்டம், போலியான வழக்குகள் உள்ளிட்டவற்றை திணிக்கிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை பற்றி இந்த அரசு கண்டும் காணாத விதத்தில் செயல்பட்டு வருகிறது என அவர் கூறியிருக்கிறார்.

அதேபோன்று அதிமுகவின் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பு செயலாளர் ஜே சி டி பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி டி.ரவி, தி நகர் சத்யா, ஆர் எஸ் ராஜேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தென்சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், வேளச்சேரியில் தென்சென்னை, தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம் கே அசோக் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version