Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெஞ்சுவலியால் இன்று காலமானார்!!

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நயினா முகமது (வயது 73) நெஞ்சுவலியால் இன்று காலை காலமானார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த நயினா முகமது, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் விரக்தியில் இருந்த அவர், 2004-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இதனைத்தொடர்ந்து அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்தார். அதன் பின்னர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

அதிமுக அரசு, தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்ததை கண்டித்து அதிமுகவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு விலகினார். அதன்பிறகு, வேறு கட்சியிலும் சேரும் எண்ணமில்லை என்றும் தீவிர அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றிய போது உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து அவரது உடல் கடையநல்லூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள காதர் மைதீன் பெரிய குத்பா பள்ளிவாசல் மையவாடியில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version