கிளிஜோதிடரிடம் வீரத்தை காட்டும் திமுக அரசு – பாமக தலைவர் அன்புமணி!
கடலூர் தொகுதியில் பாமக சார்பில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இதற்காக அங்கு வாக்கு சேகரிக்க சென்ற பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வாக்கு சேகரிப்பிற்கு இடையே கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அந்த ஜோதிடரும் தங்கர் பச்சான் வெற்றி பெறுவது உறுதி என்று கூறியதாக தெரிகிறது.
இதற்கிடையில் தங்கர் பச்சான் கிளி ஜோதிடம் பார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. இதனை கண்ட வனத்துறையினர் காட்டுயிர்னமான பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பது சட்டவிரோதம் என்று கூறி தங்கர் பச்சானுக்கு ஜோதிடம் பார்த்த கிளி ஜோதிடர் செல்வராஜ் என்பவரை கைது செய்தனர்.
செல்வராஜ் தவிர அதேபகுதியில் கிளியை வைத்து ஜோதிடம் பார்த்து வந்த சீனிவாசன் என்பவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 4 கிளிகளை பறிமுதல் செய்தனர். என்னதான் வனத்துறை சட்டப்படி கிளி ஜோதிடரை கைது செய்திருப்பதாக கூறினாலும், தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என்று கூறியதாற்காகவே ஜோதிடர் கைது செய்யப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி இதனை விமர்சனம் செய்திருந்தார்.
மேலும், ”தமிழக வனப்பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்களும் விலங்குகளும் அழிக்கப்படுவதை கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் திமுக அரசு ஏழை கிளி ஜோதிடரிடம் அவர்களின் வீரத்தை காட்டியுள்ளது” என மிகவும் கடுமையாக சாடி இருந்தார். இதனை தொடர்ந்து இனி கிளிகளை வைத்து ஜோசியம் பார்க்கக்கூடாது என்று வார்னிங் கொடுத்து கிளி ஜோதிடர்களை விடுவித்துள்ளனர்.