5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வைக்கும் புதிய கோரிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும்.
மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகம் பாதித்த ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் மூலமாக சென்னை,மதுரை,கோவை,சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகரங்களில் முழுமையான ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் அலை மோதுகின்றனர். இந்நிலையில் கடை திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, பல இடங்களில் 26.4.2020 தொடங்கி, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அரசு முடிவெடுத்துள்ளது.
இதனை அனைவரும் உறுதியுடன் கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அரசு எடுத்துள்ள இந்த முடிவின் காரணமாக, இன்று ஒரே நாளில் தேவையான பொருட்களை வாங்க மக்கள் வீதிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதனால் மக்கள் நெரிசல் அதிகமாவதற்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே, இன்று ஒருநாள் மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாலை வரை நீட்டிக்கவும், அப்போது தனிமனித விலகலைக் கடைப்பிடித்து மக்கள் பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.