Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

MK Stalin-News4 Tamil Online Tamil News

MK Stalin-News4 Tamil Online Tamil News

பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

விழுப்புரத்தில் அ.தி.மு.கவினரால் உயிருடன் தீவைத்து கொளுத்தப்பட்ட சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை – கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து; கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயஸ்ரீ, நீதித்துறை நடுவரிடம் இதுகுறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 95% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்கவே செய்யும். கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தை தருமபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கருக்கி, கதறக் கதறக் கொன்றதற்குக் காரணமானவர்கள் அ.தி.மு.க.,வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.

தீயிட்டு கொளுத்தப்பட்ட 10ம் வகுப்பு மாணவி.. அதிமுகவினர் தண்டிக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீகள் போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்கு செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.கழகம் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version