Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களா?

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களா?

ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளரான தில்லை கதிரவன் அவர்களின் இல்லத் திருமண நிகழ்வானது சென்னை அண்ணா நகரிலுள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு சோதனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேலாவது திமுகவினர் குடும்ப வாரிசுகளுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“அப்படியென்றால் உங்களது பெயர் தமிழ்ப் பெயரா என்று நீங்கள் கேட்கலாம். கலைஞருக்கு கம்யூனிச கொள்கைகள் மீது இருந்த ஈர்ப்பால் எனக்கு கம்யூனிஸ தலைவர் ஸ்டாலின் பெயர் வைக்கப்பட்டது. எனது மூத்த அண்ணன் மு.க.முத்துவுக்கு தனது தந்தை முத்துவேலரின் நினைவாக அந்த பெயரை கலைஞர் சூட்டினார். பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக எனது இரண்டாவது அண்ணனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். அதுபோல எனது தம்பிக்கு தமிழரசு, தங்கைகளுக்கு தமிழ்ச்செல்வி, கனிமொழி என தமிழ்ப் பெயர்களையே கலைஞர் சூட்டினார். பேரப்பிள்ளைகள் முதற்கொண்டு அனைவருக்கும் தமிழ்ப் பெயர்தான்.

மேலும் ஸ்டாலின் என்ற பெயர் வைத்ததால் நான் பல சங்கடங்களை அனுபவித்துள்ளேன். சென்னையிலுள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றபோது என்னுடைய ஸ்டாலின் என்னும் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் கலைஞரோ, பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார். அதுபோலவே ரஷ்யா சுற்றுப் பயணம் சென்றிருந்தபோதும் ஸ்டாலின் என்ற பெயரால் பல சங்கடங்களை அனுபவித்தேன்” என்றும் இது குறித்து விளக்கினார்.

அடுத்ததாக தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பேசிய ஸ்டாலின், “முதலீடுகளை கொண்டுவந்து அதன்மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் நானே முன்னின்று பாராட்டு விழா நடத்துகிறேன் எனக் கூறியுள்ளேன். ஆனால், ஸ்டாலின் எங்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என முதல்வர் கூறுகிறார். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். முதலீடுகள் வரவில்லை என அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 5 லட்சம் கோடி வரை முதலீடுகள் வந்துள்ளன என்றும் இதன்மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்கள். இதன்மூலம் தமிழகத்துக்கு எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கின்றன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன? எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன? இதைத்தான் வெள்ளை அறிக்கையாக வெளியிடச் சொன்னோம். ஆனால், அதைவிட்டு அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை வெள்ளை அறிக்கை வெளியிடச் சொல்கிறார்” என்று கூறினார்.

மேலும், “திமுக ஆட்சியில் நான் துணை முதல்வராக இருந்தபோது வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், முதலீடு திரட்டுவதற்காக செல்லவில்லை. சில அதிகாரிகளை மட்டுமே அழைத்துக்கொண்டு சென்றேன். அதுபோலவே மெட்ரோ ரயில் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் சென்றோம்” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.நல்ல வேளையாக இந்த முறை ஜப்பானின் துணை முதல்வர் என்று உளராமல் பேசினாரே என்று கட்சிகாரர்கள் சந்தோஷப்பட்டு கொண்டார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version