Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்டளையிட்ட தமிழக மக்களுக்கு நன்றி! திமுக தலைவர் ஸ்டாலின்!

கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுவை கேரளா அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபைத் தேர்தலை அறிவித்தது.
அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்றைய தினம் தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னணியில் இருந்து வந்தது. இந்த நிலையில், திமுக கூட்டணி 156 இடங்களிலும் அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆகவே பத்து வருடங்களுக்கு பின்னர் தமிழ்நாட்டில் மறுபடியும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்க இருக்கிறது

.சுமார் 53 ஆண்டு அரசியல் பயணத்தை கடந்து வந்திருக்கின்ற தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் வருங்கால முதலமைச்சருமான ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர இருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், நாளை திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் இரவு சுமார் 11 மணி அளவில் லயோலா கல்லூரியின் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த ஸ்டாலின் தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, சுமார் பத்தாண்டு காலத்திற்கு பின்னர் தமிழகத்தை ஆட்சி செய்ய கட்டளையிட்டு இருக்கும் தமிழக மக்களுக்கு என்னுடைய நன்றி என்று தெரிவித்த அவர் நாளையோ அல்லது நாளை அல்லது மறுநாளோ சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி தலைவரை தேர்ந்தெடுத்து ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

Exit mobile version