போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களின் விவசாய நிலம் அபகரிப்பு! திமுக எம்பிக்கு தொடர்பா?

0
208
Tindivanam

போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களின் விவசாய நிலம் அபகரிப்பு! திமுக எம்பிக்கு தொடர்பா?

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அவனம்பட்டு கிராம மக்கள், போலி ஆவணங்கள் மூலம் வேறு சிலருக்கு மாற்றப்பட்ட தங்களின் விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி, விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் நிலங்களை அவர்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபர்களின் பெயர்களில் மாற்றப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் திமுக எம்பி ஒருவருக்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அருகேயுள்ள அவனம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது,நாங்கள் விவசாயம் செய்து வந்த நிலத்தை, சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலமாக அவர்கள் பெயருக்கு மாற்றி எங்கள் நிலத்தை கைப்பற்றியுள்ளனர். நாங்கள், ஜக்காம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் பெறுவதற்காக சிட்டா நகல் எடுத்து பார்த்த போது, பெரும்பாலான கிராம மக்களின் நிலங்களின் பட்டா, சிட்டா வேறு சில நபர்களின் பெயர்களில் மாற்றப்பட்டுள்ளது.

இதையறிந்த நாங்கள், மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகி, தனித்தனியாக ஒவ்வொரு நபர்களின் சர்வே எண்ணுக்கு வில்லங்கம் எடுத்து பார்த்த போது, எங்களின் விவசாய நிலத்தை, எங்களுக்கு தெரியாமலே போலி ஆவணங்கள் மூலமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அறிந்தோம். இவ்வாறு போலி ஆவணங்கள் மூலம் பறித்த எங்களின் விவசாய நிலத்தை, மீண்டும் எங்களுக்கே மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த புகார் மனுவில் திமுகவின் எம்பியும்,முக்கிய நிர்வாகிகளில் ஒருவரின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அனைத்து நிலங்களும் திமுக எம்பியின் தூண்டுதலால் தான் போலி ஆவணங்கள் கொண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.