திமுகவில் மக்கள் பிரச்சினை சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது,அரசிடம் கோரிக்கை மனு அளிப்பது உள்ளிட்டவைகளை அக்கட்சியின் மூத்த தலைவர்களான திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தான் முன்னின்று நடத்தினர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஜூன் 15 முதல் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரி திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை மனு அளித்திருந்தார். இது சம்பந்தமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை செயலாளர் என இருவரையும் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது போன்ற கோரிக்கைகளை திமுகவில் மூத்த தலைவர்கள் மூலமாக வைப்பது தான் வழக்கம். இந்நிலையில் அவர்களை விட்டு திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மூலமாக கோரிக்கை வைத்திருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மூத்த நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் செய்ய ஆரம்பித்துள்ளார். திமுகவில் மூத்த தலைவர்கள் பலரிருந்தும் திமுக தலைவர் ஸ்டாலினின் வாரிசு என்ற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை கட்சியில் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் திமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி அளித்த பேட்டியும் அமைந்துள்ளது.
மேலும் ஆரம்ப காலத்தில் அரசியலில் ஈடுபடும் ஆசையே இல்லை என்ற உதயநிதி ஸ்டாலின் திடீரென்று அரசியலில் நுழைந்து கட்சியின் முக்கிய பொறுப்பையும் பெற்றது கட்சியிலுள்ள பல மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.