பேக்கரியில் கைவரிசை காட்டிய உடன்பிறப்புகள்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

0
108

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.இந்த நிலையில், திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றே தமிழகத்தில் அந்த கட்சியினரின் ரவுடிசம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றே சென்னை புறநகர் பகுதியில் இருந்த அம்மா உணவகத்தை திமுகவைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இந்த காணொளி தமிழகம் முழுவதும் மிகவும் வைரலாக பரவியது.

இதனை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை அந்த பகுதிக்கு அனுப்பி நிலையை சரி செய்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே டீக்கடை, பெட்டிக்கடை, சலூன் கடை, பிரியாணி கடை, என்று தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் தங்களுடைய கை வரிசையை காட்டி இருந்தார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் திமுக இதுவரையில் ஆட்சிக்கு வரவில்லை ஆட்சிக்கு வராமல் இருக்கும் சமயத்தில் இவ்வாறு செய்யும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் ஒருவேளை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டுவிட்டால் தமிழகத்தின் நிலைமை என்னவாக இருக்கும் என்று பலரும் பரவலாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், தஞ்சாவூர் அருகே இருக்கின்ற சூரக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தன் இவர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை சாலையில் பேக்கரி கடையும், டீக்கடையும், நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் மாலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திமுக மாவட்ட பிரதிநிதி பாண்டவர், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் முருகேசன், திமுக நிர்வாகிகள் சுரேஷ்பாபு மற்றும் இசையரசன் உள்ளிட்டோர் கந்தர்வகோட்டை தொகுதியில் நடந்த கறி விருந்துக்கு சென்றிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து மன்னார்குடி சாலையில் செயல்பட்டு வந்த அந்த பேக்கரியில் வந்து சிகரெட் கேட்டிருக்கிறார்கள். கடையில் இருந்த பெண்மணி சிகரெட் கொடுக்க தாமதம் செய்ததால் தகராறு செய்தார்கள் ஆத்திரமடைந்து திமுக நிர்வாகிகளான பாண்டவர், முருகேசன், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் அங்கே இருந்த சேர் மற்றும் டீ பாய்லர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

இந்த தகவலை தெரிந்து கொண்ட அந்தக் கடையின் உரிமையாளர் ஆனந்தன் சூரக்கோட்டையில் இருக்கின்ற ஆட்களுடன் கடைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவரைக் கண்டதும் திமுக நிர்வாகிகள் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் செல்ல முயற்சி செய்தார்கள். அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து இருக்கிறார்கள். அதோடு இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.