தேர்தல் வியூகத்தை தொடங்கியது திமுக!!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்வு பணிகளை தற்போது தொடங்கியுள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுக உடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது.
வலுவான கூட்டணி அமைந்ததால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 38 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
இன்னும் சரியாக ஓர் ஆண்டுடன் நாடாளுமன்ற பதவி காலமான ஐந்து ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஏப்ரல் அல்லது மே மாதம் போல் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது.
அதனை எதிர்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அடுத்த ஆண்டிற்கான தேர்தல் பணிகளையும் சிறிது, சிறிதாக தொடங்கியுள்ளன.
கடந்தாண்டு 38 நாடாளுமன்றத் தொகுதிகளை கைப்பற்றியதை விட இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 39 தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளன.
மற்றொருபுறம் அதிமுக, பாஜக பாமக மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறை அதிமுகவுடன் விஜயகாந்த் அவர்களுடைய தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலுவாக உள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகளே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.