அரசியல் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுக
தேசிய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் பிரஷாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் திமுக எதிர்ப்பார்க்காத வெற்றியை பெற்றிருந்தாலும் அதனுடன் இணைந்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் இறுதியாக நடத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அக்கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதோ 3 மாதங்களில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிய திமுக தலைவர் ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக அவர் எதிர்பார்க்காத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி கட்சியிலும் தமிழக அரசியலிலும் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்து தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என அதிமுகவும்,திமுகவும் போட்டி போட்டு செயல்பட்டு வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா என இரு பெரும் முக்கிய தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், எவ்வாறாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இரண்டு கட்சிகளும்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் தமிழக அரசியல் களம் யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக திரும்பி வருகிறது. குறிப்பாக மிசா வழக்கு, பஞ்சமி நில விவகாரம் மற்றும் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற உதவும் வன்னியர்களை புறக்கணித்தது என தொடர் சோதனைகளை சந்தித்து வருகிறது திமுக தலைமை. இதில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுகவை பாமக தலைமை தொடர்ச்சியான விமர்சனங்களால் வெளுத்து வாங்கியது. இதைக்கண்ட திமுக தலைமை இனியும் தாமதிக்காமல் சரியான கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தேசிய அளவில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் மத்தியில் பிரதமர் மோடி, பிகாரில் நிதிஷ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து அவர்களின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவருமான பிரஷாந்த் கிஷோரை திமுக தலைமை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் இதுவரை மு.க.ஸ்டாலினுடைய அரசியல் செயல்பாடுகளை திட்டமிட்டு கொடுக்க 2016 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த சுனில் அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பிரஷாந்த் கிஷோர் இடையே இதற்கான முதல் சந்திப்பு சென்னையில் நடந்திருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களது இல்லத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் வந்துள்ளார். பிறகு திமுக தலைவர் ஸ்டாலினுடன் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனையில், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்குபெற்றனர் என்றும் கூறப்படுகிறது.
பிரஷாந்த் கிஷோர் அவரது வியூகங்கள் தொடர்பாக தலைவர்களிடம் விளக்கியுள்ளார். இதனையடுத்து தமிழக அரசியல் சூழல் குறித்தும் விவாதிக்கபட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக தலைவருக்கு எதிராக எழுந்த விமர்சங்களான மிசா வழக்கு, முரசொலி அலுவலக நில விவகாரம் போன்றவற்றில் எதிர்க்கட்சிகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இந்த நிகழ்வின் போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.