நாடாளுமன்ற கூட்டத்தொடர் அல்லது சட்டமன்ற கூட்டத்தொடர் ஏதாவது ஒன்று கூடுவதற்கு முன்பாக ஆளும் கட்சியினர் தன்னுடைய கட்சி சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து அறிவுரை வழங்குவது நிதர்சனமான ஒன்று அது போன்ற நிகழ்வு பலமுறை நடைபெற்றிருகிறது.
அதிலும் குறிப்பாக நாடாளுமன்றம் கூடுகிறது என்று சொன்னால் அதற்கு முன்பாக மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை செய்வதும் அதேபோல அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தாங்கள் கொண்டு வரவிருக்கும் திட்டங்களுக்கு எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை நல்குவதும் காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 18ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது சென்னை தலைமைச்செயலகத்தில் இருக்கின்ற பேரவை மண்டபத்தில் 2022-23 உள்ளிட்ட ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவிருக்கின்றார்.
இது காகிதம் இல்லாத முழுமையான டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி பட்ஜெட் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தினத்தன்று மாலையில் தலைநகர் சென்னையில் திமுகவைச் சார்ந்த சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் 18ஆம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திலிருக்கின்ற கலைஞர் அரங்கில் நடைபெறும். இந்த கூட்டத்தில் திமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் யாரெல்லாம் பங்கேற்க வேண்டும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு எந்த விதத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும், அவை மாண்புகளை பின்பற்றுவது குறித்து முக்கிய ஆலோசனை வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.