தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அவருக்கும் சக மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 20 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து, இருதினங்களுக்கு முன்பு 61 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி நேற்று மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 9 பேருக்கும் எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்தடுத்து பள்ளிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எவ்வித உத்தரவும் வெளியாகாது என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது. ஆனால் கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டாம் என்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வகுப்பறைகளை தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.