எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை, அதிமுக சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் எனக் கூறியுள்ளார் பன்னிரின் ஆதரவாளரான வைத்திலிங்கம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும். அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ், சசிகலா என யாரும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 24ம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட முப்பெரும் விழா மாநாட்டை பன்னீர் தரப்பு எப்படி நடத்த முடியும் என்ற கேள்வி எழுந்தது. கட்சி பெயர், கொடியை பயன்படுத்தாமல் ஓபிஎஸ் தரப்பால் மாநாட்டை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்ஜிஆர் ஏற்படுத்திய கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளார்களா, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நாளை வழக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
இப்போது எடப்பாடிக்கு சொந்தம் என்று எதுவுமில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றே சொல்லி உள்ளார்கள். திருச்சி மாநாட்டிற்கு அதிமுக மாநாடு என்ற பெயரில்தான் தொண்டர்களை அழைப்போம். நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிசாமியை வேண்டுமானால் இரண்டாவது அதிமுகவாக வைத்துக் கொள்ளலாம். எனத் தெரிவித்துள்ளார்.