வீடுகளின் முன்பு அனுமதி பெறாமல் நீ பார்க்கிங் போர்டுகளோ அல்லு நோ பார்க்கிங் தடுப்புகளோ வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் போக்குவரத்து காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தக்குமார் என்பவர் சென்னையில் உள்ள அடையாறு, மயிலாப்பூர், மாம்பலம், தியாகராய நகர், அசோக் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் முன்பாக எந்தவித அனுமதியும் இன்றி நோ பார்க்கிங் போர்டுகளை வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
நந்தகுமார் அவர்கள் அளித்துள்ள அந்த மனுவில் சென்னையில் மயிலாப்பூர், அசோக் நகர், தியாகராய நகர் போன்ற குறிப்பிட இடங்களில் பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் விதமாக வீட்டில் வசிப்பவர்கள் வீடுகளின் முன்பாக நோ பார்க்கிங் போர்டுகளை வைத்துள்ளனர். நோ பார்க்கிங் போர்டுகள் மட்டுமில்லாமல் பூந்தொட்டிகளையும் வைத்து வாகனங்களை நிறுத்த முடியாமல் செய்கின்றனர். இது குறித்து போக்குவரத்து காவல் துறையினரிடமும் சென்னை மாநகராட்சியிடமும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்ட பொழுது வீடுகளின் முன் நோ பார்க்கிங் போர்டுகள் வைக்க அனுமதி எதுவும் அளிக்கவில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. எனவே வீடுகளின் முன் வைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டுகளையும் பூந்தொட்டிகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அவர்கள் இந்த நோ பார்க்கிங் போர்டுகளையும் பூந்தொட்டிகளையும் தடுப்புகளையும் அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்து பின்னர் இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் அவர்கள் ஆஜாரானர். ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ் அவர்கள் சென்னை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் நோ பார்க்கிங் போர்டுகள் மற்றும் நோ பார்க்கிங் தடுப்புகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருக்கும் நோ பார்க்கிங் போர்டுகள் மற்றும் தடுப்புகளை அகற்றி போக்குவரத்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இது குறித்து சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.