வாஸ்து ரீதியாக வீட்டில் சில முக்கியமான பொருள்களை வைப்பதன் மூலம் லட்சுமி கடாட்சமும், உடல் ஆரோக்கியமும், நிம்மதியும் நிலைத்திருக்கும். அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் படி வீடுகளில் வைக்கக்கூடிய உருளி மற்றும் சீன சாஸ்திரத்தின் படி வைக்கக்கூடிய காற்று மணி ஆகியவற்றை நமது வீடுகளில் வைப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன? என்பதற்கான விளக்கத்தை தற்போது காண்போம்.
1. காற்று மணி:
வீடுகளில் நேர்மறையான எண்ணங்கள் உருவாக வேண்டும், கண் திருஷ்டிகள் விலக வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான வாஸ்து பொருட்களை வாங்கி வைக்கும் பழக்கம் என்பது பலருக்கும் உண்டு. அவ்வாறு மக்கள் வாங்கி வைக்கும் பொருட்களுள் ஒன்றுதான் காற்று மணி.
கோவில்களில் எழுப்பக்கூடிய மணி ஓசையை கேட்கும் பொழுது எவ்வாறு புத்துணர்ச்சி என்பது ஏற்படுகிறதோ, அதேபோன்றுதான் இந்த காற்று மணியில் இருந்து வரக்கூடிய சத்தமும். இது சீன வாஸ்து பொருட்களுள் ஒன்றாக இருந்தாலும் கூட, இது வீடுகளில் நேர்மறையான எண்ணங்களையும், அதிர்ஷ்டங்களையும், பல யோகங்களையும் தரக்கூடியது என்பதால் நம் நாட்டு மக்களும் இதனை வீடுகளில் வாங்கி வைத்துள்ளனர்.
இந்த காற்று மணியை நமது வீடுகளில் வைப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள், செல்வ செழிப்பு, ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் சிறந்து விளங்கும் என கூறப்படுகிறது. பஞ்சபூதங்களின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் இந்த காற்றுமணியை வாங்கினோம் என்றால், பலவிதமான அதிர்ஷ்டங்களை கொடுக்கும்.
பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அனைத்து விதமான சக்திகளும் நமது வீட்டில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே காற்று மணி வாங்கும் பொழுது ஐந்து கம்பிகள் இருக்குமாறு வாங்குவது சிறப்பு. மேலும் சிவப்பு, பச்சை, மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இந்த காற்று மணியை வாங்குவதும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
சிவப்பு நிறம் என்பது வீட்டிற்கு சக்தியையும், ஆற்றலையும் கொடுக்கும். பச்சை நிறம் என்பது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும் கொடுக்கும். வெண்மை நிறம் என்பது வீட்டிற்கு அமைதியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த நிறங்களின் நன்மைகளை தெரிந்து கொண்டு அதன் பிறகு காற்றுமணியை வாங்குவது சிறப்பு.
இந்த காற்று மணியை அதிகமான காற்று வீசக் கூடிய இடத்தில் வைக்க கூடாது. மிகவும் மென்மையான காற்று வரக்கூடிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். அதாவது இந்த காற்று மணியின் சத்தம் மிகவும் மென்மையானதாக கேட்க வேண்டும். ஆர்ப்பாட்டமான சத்தமாக கேட்கக் கூடாது. எனவே உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் மென்மையான ஓசை கிடைக்குமோ, அந்த இடத்தில் வைத்துக் கொள்வது சிறப்பு.
வீட்டின் மேற்கு திசையில் வைக்கும் பொழுது கல்வியும், ஞானமும் பெருகும். வடமேற்கு திசையில் வைக்கும் பொழுது வெற்றியையும், செல்வாக்கையும் தேடித் தரும். தென்மேற்கு திசையில் வைக்கும் பொழுது அதிர்ஷ்டம் உண்டாகும். வடக்கு திசையில் வைக்கும் பொழுது செல்வ வளம், பணவரவு அதிகரிக்கும். கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கும் பொழுது நேர்மறையான ஆற்றல்கள் உருவாகும்.
2. உருளி:
பெரும்பாலான வீடுகளில், கடைகளில், தொழில் செய்யக்கூடிய இடங்களில் உருளியில் பூக்களை போட்டு வைத்திருப்பார்கள், அது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, அந்த உருளியானது இருக்கக்கூடிய இடத்தில் நேர்மறை ஆற்றல்கள் உருவாகும். எனவே தான் அனைத்து இடங்களிலும் உருளி என்பதை வைக்கின்றனர்.
இந்த உருளியை இரும்பு மற்றும் எவர் சில்வர் ஐ தவிர்த்து மற்ற எந்த உலோகங்களில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, கண்ணாடி, மண் ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உருளியில் தண்ணீர் ஊற்றி வைத்திருப்பதால், அந்த உருளி இருக்கக்கூடிய இடத்தில் குளிர்ச்சியும், செழுமையும் அதிகமாக இருக்கும். மேலும் அந்த உருளியில் பூக்கள், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை போட்டு வைப்பதால் அந்த உருளியானது எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்துக்கொண்டு, நேர்மறையான ஆற்றல்களை உருவாக்கி வெளியிடும்.
அழகான பூக்களை அந்த உருளியில் போட்டு வைப்பதால் அதனை பார்க்கும் பொழுது சந்தோஷமும், நிம்மதியும் ஏற்படுகிறது. இந்த உருளியை பயன்படுத்தும் முறையானது பண்டைய காலங்களில் இருந்தே இருக்கிறது. இதனால் வீடுகளில் செல்வ செழிப்பும், சகல சௌபாக்கியங்களும் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த உருளியானது மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. இந்த உருளியை வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுதும், வீட்டிற்குள் நுழையும் பொழுதும் அனைவரும் பார்க்கும் விதத்தில் வைக்க வேண்டும். இந்த உருளியை பார்த்துவிட்டு ஒருவர் வெளியில் சென்றால், செல்லக்கூடிய காரியம் வெற்றி அடையும் எனவும் கூறப்படுகிறது.
நமது வீட்டில் உள்ள நபர்களை பார்த்தோ அல்லது நமது வீட்டினை பார்த்தோ யாரேனும் ஒருவர் கண் திருஷ்டி கொண்டால், அந்த கண் திருஷ்டியையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் சக்தி இந்த உருளிக்கு உண்டு. எனவே உருளி இருக்கக்கூடிய வீடுகளில் கண் திருஷ்டி என்பது நுழையாது.