நீங்க டேட்டிங் ஆப் யூஸ் பண்றீங்களா..?? உஷாரா இருங்க.!!
இந்த காலகட்டத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு கூட டேட்டிங் ஆப்கள் வந்துவிட்டன. இதுபோன்ற செயலிகள் மூலம் தங்களுக்கு பிடித்தமான ஆண் துணையையோ அல்லது பெண் துணையையோ நாம் பெற முடியும். இதனால் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த டேட்டிங் ஆப் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
பொதுவாக இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தும்போது பயனர்களின் பெயர், வயது, புகைப்படம் மற்றும் இருப்பிடம் போன்ற சில தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவது வழக்கம். ஆனால் இதுபோன்ற தகவல்களை பகிர்வது அந்த அளவிற்கு பாதுகாப்பானது அல்ல என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அதன்படி, ஃபயர் ஃபாக்ஸ் நிறுவனத்தின் மோசில்லா சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 25% டேட்டிங் செயலிகள் அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி வேறு தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார் ஒன்றை கூறியுள்ளது. இதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த செயலிகளை நாம் இயக்காமல் இருந்தால் கூட பேக்ரவுண்டில் செயல்பட்டு பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை திருடுவதாக கூறுகிறார்கள்.
இதனால், எப்போதும் இதுபோன்ற ஒரு டேட்டிங் ஆப்களை பயன்படுத்தும்போது அந்த செயலியில் உள்ள செட்டிங்ஸை அடிக்கடி சரிபார்த்து தேவையற்ற அணுகல்களுக்கான வசதியை நிறுத்தி வைக்குமாறு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் இதுபோன்ற செயலிகள் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம்.