Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?

மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்! இது எங்கே, எப்படி நடந்தது?

அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் இவருக்கு வயது 57. இவரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்துவதற்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. எனவே டேவிட் பென்னட்டை காப்பாற்றுவதற்காக இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட  பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளிக்கவே, அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட்டிற்கு பொருத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து டேவிட் பென்னட்டை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து  வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் எனவே, பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

மேலும் பன்றியின் இதய திசுவை தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்திய பிறகே பன்றியின் இதயம் டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதேபோன்று கடந்த ஆண்டு அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த ஒரு நபருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version