சமீப காலமாகவே தனியார் நர்சிங் கல்லூரிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தங்களுடைய கல்லூரிகள் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அடிக்கடி நிகழக் கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னதாக அருப்புக்கோட்டையில் இருக்கக்கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் பயிலக்கூடிய மாணவிகள் தங்களுடைய கல்லூரி அங்கீகரிக்கப்படாத கல்லூரி என சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் செயல்படக் கூடாது என்றும் மீறி செயல்பட்டால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அடிக்கடி நிகழ்வதற்கான காரணம் குறித்து விளக்குகிறார் திருவனந்தபுரம் மருத்துவ மேலாண்மை கல்லூரி முதல்வரும் கல்வியாளருமான முனைவர் ஜெயராஜ் சேகர் அவர்கள் :-
மாணவ மாணவிகளின் உடைய வறுமைகளை மூலப்பொருளாகக் கொண்டே இது போன்ற கல்வி நிறுவனங்கள் செயல்படுவதாகவும் எப்படியாவது சீக்கிரம் படிப்புகளை முடித்து வேலைகளுக்கு சென்று விட வேண்டும் என நினைக்கக்கூடிய மாணவர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகள் நிகழ்வதாகவும் தெரிவித்தவர், 12 ஆம் வகுப்பு படித்த பின்னர் தான் நர்சிங் படிப்புகளில் சேர முடியும் என்றும் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் நாசிங் படிப்பது என்பது ஏமாற்று வேலை என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா நர்சிங் கவுன்சிலானது நர்சிங் படிப்புகளுக்காக மாநில அளவில் நர்சிங் கவுன்சிலர்களை அங்கீகாரம் செய்திருக்கிறது என்றும் அவர்களுடைய அங்கீகாரத்தில் இதுவரை நான்காண்டு பிஎஸ்சி நர்சிங், மூன்றாண்டு டிப்ளமோ நர்சிங் மற்றும் இரண்டு ஆண்டு ஏஎன்எம் நாசிங் படிப்புகள் மட்டுமே அங்கீகாரத்துடன் வழங்கப்படுகிறது என்றும் வேறு ஏதாவது படிப்புகள் உள்ளது என யாராவது தெரிவித்தால் அதனை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
குறிப்பாக ஒரு மாணவர் நர்சிங் படிப்பை தேர்வு செய்யும் பொழுது அந்த கல்லூரியின் உடைய தரத்தை அறிய வேண்டும் என்றும் அந்த கல்லூரி அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்பதை அறிந்து கொள்ள https://www.tamilnadunursingcouncil.com/#/home என்ற இனிய தலை பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் முனைவர் ஜெயராஜ் சேகர் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.