விரதம் இருக்கும் பொழுது இதை செய்துவிடாதீர்கள்!

0
2218

விரதமிருக்கும் போது இதை செய்யக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆன்மீக ரீதியாக அனைவரும் விரதமிருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறோம். வீட்டில் நலம் பெருக வேண்டும், செல்வம் பெருக வேண்டும், காரியம் சித்தி பெற வேண்டும், கணவரின் ஆயுள் நலம் பெற வேண்டும் என பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற நாம் விரதம் இருப்போம்.

விரதம் என்பது நமது ஐம்புலன்களையும் அடக்கி உணவு உண்ணாமல் இருப்பது தான் உண்ணாவிரதம். இந்த விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் ஆகிய மூன்றும் தூய்மை அடையும்.

மாதத்திற்கு இருமுறையோ வாரத்திற்கு ஒருமுறையோ கண்டிப்பாக நமது தெய்வத்திற்கு நாம் விரதமிருக்க வேண்டும்.

விரதம் இருப்பதனால் ஆன்மீக ரீதியாகவும் சரி, உடல் ஆரோக்கியம் சம்பந்தமாகவும் சரி நல்ல பலன்களை நாம் பெற முடியும்.

விரதமிருக்கும் போது நாம் என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம்

1. பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும் விரதம் இருக்கும் பொழுது அன்றைக்கு காலையில் வீட்டை சுத்தம் செய்யலாமா? என்பது தான். நாளைக்கு விரதம் இருக்கப் போகிறீர்கள் என்றால் இன்றே வீடுகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும். பூஜை அறையை கண்டிப்பாக நாம் சுத்தம் செய்ய வேண்டும். விரதம் இருக்கும் நாளில் வீட்டை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

2. நாம் மிகவும் அமைதியாகவும் சாந்தமாகவும் யாரிடமும் கோபப்படாமலும், தேவை இல்லாத வார்த்தைகளை பேசாமலும், கணவனோ அல்லது மனைவியிடமோ சண்டை போடாமல் இருப்பது நாம் இருக்கக்கூடிய விரதத்தின் முழுப் பயன்களையும் நம்மால் பெற முடியும்.

3. பூஜை அறையை முதல்நாளில் சுத்தம் செய்து சாமி படங்களை துடைத்துவிட்டு மலர் சாற்றி வைக்கவேண்டும். விரத நாள் காலையில் எல்லா தெய்வங்களுக்கும் மாலை சாற்றி வழிபட வேண்டும்.

4. இந்த விரத நாளில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தலைக்கு குளித்து தூய்மையான ஆடையை அணிந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்.

5. எந்த ஒரு கடவுளுக்கு விரதம் இருக்கப் போவதாக இருந்தாலும் சரி முதலில் விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு தான் அடுத்தது இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்.

6. விரத நாளில் மதியம் தூங்கக் கூடாது. கணவன் மனைவி உடலுறவு கொள்ளக்கூடாது. அசைவம் சாப்பிடக்கூடாது. புரளி பேசக்கூடாது.

7. மாதவிடாய் ஆன பெண்கள் விரதம் இருக்கலாமா என்று கேட்டால் ஆன்மீக காரியத்தில் ஈடுபட வேண்டாம். ஆனால் மனதார மந்திரங்களைப் படிப்பதால் எந்த ஒரு தவறும் கிடையாது.

8. விரதம் இருக்கும் பொழுது பூஜை அறையில் விளக்கு ஏற்றி அமர்ந்து மனதார எந்த கடவுளை நினைத்து வேண்டுகிறோமோ அந்த கடவுளை நினைத்து அந்த கடவுளின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

9. வயதானவர்கள் மற்றும் உடல்நிலை குன்றி அவர்கள் தங்களுடைய உடல் நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருக்கலாம்.

10. 24 மணி நேரமும் எந்த தெய்வத்தை நினைத்து கொண்டு விரதம் இருக்கிறோமோ அந்த தெய்வத்தின் உருவம் உங்களது மனதில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

இவ்வாறு விரதமிருக்கும் போது மதிய நேரங்களில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. கேளிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது. முழு மனதோடு இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டிருக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது நினைத்த காரியம் நிறைவேறும்.