இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!!
அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து வந்தது. இந்த யுத்தத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக தொடர்ந்து வருகின்றார்.
எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காத நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை பெறுவதிலும் எடப்பாடிக்கு பெரும் சிக்கலை பன்னீர் செல்வம் உருவாக்கினார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.அத்தருணத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஏதுவாக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தன்னை அதிமுகவின் பொது செயலாளராக அங்கிகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து 10 நாட்களில் முடிவினை அறிவிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி நாளையுடன் கெடு முடிவதால் நேற்று அவசர அவசரமாக தலைமை தேர்தல் அதிகாரிகள் இரண்டு முறை ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் முடிவில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனை இன்று அல்லது நாளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் என தேர்தல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.