Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் உடனடியாக இதை செய்யுங்கள்! மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த அன்புமணி ராமதாஸ்!

ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மேலும் 13 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக ஆந்திர மாநிலத்தில் மொத்தமாக இருக்கின்ற மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்திருக்கின்றன.

ஆந்திராவின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும், பொது மக்களின் நலனுக்காகவும், அந்த மாநில அரசு முன்னெடுத்து இருக்கின்ற இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவில் ஆரம்பத்தில் இருந்த 10 மாவட்டங்களில் முற்றிலுமாக மறுசீரமைக்கப்பட்ட 33 மாவட்டங்களாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் ஆந்திராவும், தெலுங்கானா மாநிலமும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன என்றால் அது பொய்யாகாது என்று கூறியிருக்கிறார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதை ஒப்பிட்டு பார்த்தோமானால் தமிழகத்தில் மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கை மனநிறைவு வழங்கும் விதத்தில் இல்லை.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டதாக இருக்கின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் மாவட்டங்களின் மறு சீரமைத்து சராசரியாக 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் என்ற வீதத்தில் புதிய மாவட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல வருட காலமாக வலியுறுத்தி வருகிறது.

இந்த வலியுறுத்தலை ஏற்றுக்கொண்டு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் 6 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன, இருந்தாலும் இவை போதுமானது இல்லை என்று கூறி இருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகை 15.99 லட்சம், தெலுங்கானாவில் ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகை 10.60 லட்சம் மட்டும் தான். ஆனாலும் தமிழக மாவட்டங்களில் சராசரி மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, தஞ்சை, சேலம், திண்டுக்கல், திருச்சி, கோயமுத்தூர், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்கவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

முன்பே பிரிக்கப் பட்ட மாவட்டங்களில் பல சட்டசபை தொகுதிகளின் எல்லைகள் இரு மாவட்டங்களிலும் பரவிக் கிடைப்பதால் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் கருத்தில் வைத்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மேற்கொள்ளப்பட்டதை போன்று தமிழகத்தில் 12 லட்சம் நபர்களுக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும், அதற்காக மாவட்ட மறுவரை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Exit mobile version