Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கக் கோருதல் & தொடர்பாக
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதால் சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தேசிய அளவில் முதுநிலை பல்மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான நீட் தேர்வுகள் முறையே 20.12.2019, 05.01.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் எல்லாம் கூடுதல் இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 6228 முதுநிலை பல்மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 1352 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் 50% இடங்கள், அதாவது 676 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். அதேபோல், நாடெங்கும் மொத்தம் 23,729 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 18,000 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சொந்தமானவை என்பதால், அவற்றில் 50%, அதாவது சுமார் 9000 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.

மத்திய சுகாதாரத்துறை நிறுவனங்களின் இந்த விசித்திரமான நிலைப்பாடு காரணமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2430 மருத்துவ மேற்படிப்பு இடங்களும், 183 பல்மருத்துவ மேற்படிப்பு இடங்களும் பறிக்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப்படிப்பு (MBBS), இளநிலை பல்மருத்துவப் படிப்பு (BDS) ஆகியவற்றுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே அநீதி இழைக்கப்படுகிறது. இதனால் இளநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 4,500 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 1,215 இடங்களும், இளநிலை பல்மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள 425 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 115 இடங்களும் பறிக்கப் பட்டு பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுக் கொடுத்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவ்வாறு பெறப்பட்ட இடஒதுக்கீடு இவ்வாறு சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முதல் முழுமையான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி (The Central Educational Institutions (Reservation in Admission) Act, 2006) மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பட்டியல் இனத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டத்தின் 4வது பிரிவின்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான 8 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் பொருந்தாது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், North-Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Science, Shillong மட்டும் தான் மருத்துவக் கல்வி நிறுவனம் ஆகும். இதைத் தவிர, இந்தியாவில் உள்ள எந்த மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க தடை இல்லை.

அதுமட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களையும், மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கக் கூடாது. மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% இளநிலை மருத்துவ இடங்களும், 50% முதுநிலை மருத்துவப் படிபு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட உடனேயே அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களாக மாறிவிடுகின்றன. எனவே, அவற்றுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தனவர்கள், பழங்குடியினர், உயர் வகுப்பு ஏழைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது நியாயமாகாது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருத்தங்களின்படி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு பெறப்படுகிறது. இதனால், மாநில அரசுகளால் உள்ளூர் மாணவர்களுக்கு உரிய அளவில் வாய்ப்பு வழங்க முடியவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1758 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தால், அவற்றில் 50%, அதாவது 440 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், அந்த இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக இடஒதுக்கீட்டை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்பதை தாங்கள் உணர்வீர்கள்.

எனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகிய தாங்கள், இந்த விசயத்தில் தலையிட்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்திய அரசுக்கு நன்றி உடையவர்களாக இருப்பர். இதுகுறித்து தங்களிடமிருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version