இவர் தான் அந்த அதிசய மனிதர்! ரகசியத்தை வெளிப்படுத்திய ராமதாஸ்

0
136
Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் யார் இந்த அதிசய மனிதர் என்ற தலைப்பில் ஒரு புதிர் பதிவை வெளியிட்டு பதிலை கேட்டிருந்தார். அதற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய பதிலை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது யார் அந்த அதிசய மனிதர் என்று மருத்துவர் ராமதாஸ் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது.

இவர் தான் அந்த அதிசய மனிதர்!யார் இந்த அதிசய மனிதர் என்ற தலைப்பில் எனது முகநூல் பக்கத்தில் கடந்த 4-ஆம் தேதி ஒரு புதிர் பதிவு இடம் பெற்றிருந்தது. அந்த புதிருக்கு கிடைத்த விடைகள் மிகவும் அதிசயம். ஆம்… விடை பதிவிட்டவர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் அந்த அதிசய மனிதர் மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனராகிய வே.ஆனைமுத்து அவர்கள் தான் என்பதை மிகச்சரியாக குறிப்பிட்டிருந்தனர். அடித்தட்டு மக்களுக்காக உழைக்கும் ஆனைமுத்து அவர்கள், அடித்தட்டு மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா?

ஆனைமுத்து அவர்கள் இன்றைய பெரம்பலூர் மாவட்டத்தின் முருக்கன்குடியில் 21.06.1925-இல் வேம்பாயி – பூவாயி இணையரின் மூத்த மகனாக பிறந்தார். பரமத்தி வேலூரில் கந்தசாமி கண்டர் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது தந்தை பெரியாரின் உரைகளைக் கேட்டு அவரது தொண்டராக மாறினார். பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் போது, திராவிடர் கழகத்தில் இணைந்தார். பெரியாரின் சிந்தனைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் நம்பிக்கைக்குரிய பெருந்தொண்டராக திகழ்ந்தார்; திகழ்கிறார். 1974-ஆம் ஆண்டு திசம்பர் 24-ஆம் தேதி தந்தை பெரியார் மறைந்த நிலையில், அடுத்த சில வாரங்களில், அதாவது 1975-ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில், 1976-ஆம் ஆண்டில் இவரால் தொடங்கப்பட்ட பெரியார் சமவுரிமைக் கழகம் தான் இப்போது மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

குறள் மலர் என்ற இதழை கடந்த 1950-ஆம் ஆண்டிலும், குறள் முரசு என்ற இதழை 1957-ஆம் ஆண்டிலும் திருச்சியிலிருந்து வெளியிட்டார். பின்னர் 1974&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17&ஆம் தேதி சிந்தனையாளன் வார இதழை தொடங்கினார். பின்னர் அது மாத இதழாக மாற்றப்பட்டு 46 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொண்டர்கள் வழங்கும் நன்கொடையை மட்டும் கொண்டு அறிவுக்களஞ்சியமாக திகழ்கிறது. எந்தக் காலத்திலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஏராளமான தகவல்களும், புள்ளிவிவரக் குறிப்புகளும், சிந்தனையை தூண்டக்கூடிய ஆய்வுக் கட்டுரைகளும் சிந்தனையாளன் இதழில் இடம் பெற்று வருகின்றன.

பெரியவர் ஆனைமுத்து அவர்களின் குறிப்பிடத்தக்க இன்னொரு பணி தந்தை பெரியாரின் உரைகள் மற்றும் கட்டுரைகளை ‘‘பெரியார் ஈவெரா சிந்தனைகள்’’ என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டது ஆகும். 1974&ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் வரிசை மொத்தம் 3 தொகுப்புகளையும், 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாம் வரிசை 20 தொகுப்புகளையும் கொண்டதாகும். தந்தை பெரியாரின் சிந்தனைகளை வருங்காலத் தலைமுறைகள் அறிந்து கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இவர் தான் அந்த அதிசய மனிதர்! ரகசியத்தை வெளிப்படுத்திய ராமதாஸ்

1978-ஆம் ஆண்டு முதல் வட மாநிலங்களுக்கு சென்று தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பினார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ பணிகளை அகில இந்திய அளவில் முறையாகவும், விரிவாகவும் செய்வதற்கு ஏற்ற வகையில் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவை என்ற அமைப்பை பிகாரில் இராம் அவதேஷ் சிங்குடன் இணைந்து தொடங்கினார். அந்த அமைப்பு இன்னும் செயல்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் கல்வி மற்றும் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்களை நடத்தினார். இந்த இராம் அவதேஷ் சிங் பின்னாளில் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராக மாறினார். எனது சமூகநீதிப் போராட்டங்களுக்கு துணை நின்றார். என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டவர். பிகாரில் உள்ள அவரது இல்லத்திற்கு நான் விருந்தினராக சென்று உணவருந்தியுள்ளேன். அதேபோல், இராம் அவதேஷ் சிங் தமிழகம் வரும் போது எனது தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து தங்கி சென்றுள்ளார். மத்திய அரசின் கல்வி மற்றும் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடப்பங்கீடு கோரி அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், சரண்சிங் பின்னாளில் பிரதமர் ஆன வி.பி.சிங், இராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்களை இவர் சந்தித்து பேசினார். அதுமட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த கியானி ஜெயில்சிங் அவர்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார். இவை குறித்தெல்லாம் ஜூன் 4-ஆம் தேதியிட்ட பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.

பிற்படுத்தப்பட்ட தன்மைக்கு ஆளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இருந்து வலிகளை விரட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 75 ஆண்டுகளாக போராடி வரும் இந்த அதிசய மனிதரின் வாழ்க்கை வலிகள் நிறைந்ததாகும். பெரியவர் ஆனைமுத்து அவர்கள் 1954-ஆம் ஆண்டு புதுவை தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் நாயகரின் மகள் சு.சுசீலாவை மணந்தார். சுசீலாவுக்கு 5 வயது இருக்கும்போது அவரது தந்தை மறைந்தார். அதன்பின் தந்தையின் சகோதரர்களான திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தைக் கொடுத்தவரும், அண்ணா மற்றும் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான ஏ.ஜி. என்றழைக்கப்படும் ஆ.கோவிந்தசாமி, ஆ. குப்புசாமி ஆகியோரின் ஆதரவில் மிகவும் செல்வாக்காக வளர்ந்தவர். தனது வாழ்க்கையில் வறுமையையே பார்க்காதவர்.

தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் அவர்களின் மனைவி ஜென்னி ஆவார். அவரைப் போலவே தமது மனைவி சுசீலாவையும் ஆனைமுத்து அவர்கள் ஜென்னி என்று காதலாக அழைப்பது வழக்கம். கடந்த ஆண்டு ஏப்ரல் 30&ஆம் தேதி சுசீலா அம்மையார் உடல் நலக் குறைவால் காலமானார். அதன் பின் சில நாட்கள் கழித்து நான் ஆனைமுத்து அய்யா அவர்களின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினேன். அப்போதும் தமது மனைவி சுசீலாவின் நினைவாகவே ஆனைமுத்து அய்யா இருந்தார்.

அப்படிப்பட்ட அன்புமிக்க மனைவியை தமது பொதுவாழ்வு போராட்டங்களின் காரணமாக எத்தகைய துயரங்களுக்கு ஆளாக்கினார் என்பதை தமது மனைவியின் மரணத்துக்குப் பிறகு, ‘‘என் ஜென்னி ஆ.சுசீலா அவர்களை இழந்தேன்! என் அரிய செயல்களின் பின்புலம் அவர்!’’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஆனைமுத்து அய்யா அவர்கள் விளக்கியிருக்கிறார். அது கண்களை கலங்க வைக்கும் வரலாறு….

‘‘10.10.1955-இல் அரசு மருத்துவமனையில் ஆ. சுசீலா முதலாவது குழந்தையை ஈன்றார். அக்குழந்தைக்குத் தமிழ்ச்செல்வி எனப் பெயரிட்டோம்.

எவரோடும் கலந்து பேசாமல் திருக்கோவிலூரிலிருந்த வேலையை விட்டு விலகினேன். எந்தத் தொழிலும் இல்லாமல், கடன்பெற்று குறள் முரசு என்கிற கிழமை இதழை 1957 பிப்பிரவரியில் திருச்சியில் தொடங்கினேன். அது கிழமை இதழ் ஆனதால் நிறையப் பணம் செலவாயிற்று.

ஆ. சுசீலா இரண்டாவதாக 17.2.1957-இல் திருச்சியில் ஒரு ஆண் மகவை ஈன்றார். முதலில் என் துணைவியார் அணிந்திருந்த தங்க வளையலைக் கேட்டேன். ஆண் மகவைப் பெற்ற மகிழ்ச்சியில், கேட்ட உடனே தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார்.1957 மார்ச் மாதம் என் துணைவியாரிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பெற்றேன். 4 மாதம் நகர்ந்தது.1957 ஆகத்து மாதம் மற்ற நகைகளையும் கேட்டுப் பெற்றேன். கடைசியாக அவருடைய தாலியையும் பெற்று நசுக்கி அடகு வைத்துக் கடன் பெற்றுச் செலவு செய்துவிட்டு, என் மனைவி மக்களை வெறுங் கையாக விட்டுவிட்டு 26.11.1957-இல் அரச மைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டேன்.

26.11.1957-இல் கைது செய்யப்பட்ட நான் 18 மாதங்கள் தண்டனை பெற்று திருச்சியிலும் வேலூரிலும் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மக்கள் பசி பட்டினி தாங்க முடியாமல் முதலில் நான் பிறந்த முருக்கன்குடிக்குச் சென்றனர்.

அங்குச் சில மாதங்கள் இருந்துவிட்டு, பின்னர் புதுச்சேரிக்குச் சென்றனர். அங்கு என் சிறிய மாமியார் சின்னப்பொண்ணு வீட்டில் சுசீலாவும் குழந்தைகளும் சிறிது காலம் தங்கினார்கள். நான் சிறையிலிருந்து விடுதலையாகும்போது என் மனைவியும் இரண்டு மக்களும் முருக்கன்குடிக்கு வந்து விட்டனர். 1958 திசம்பர் கடைசியில்தான் என் மனைவி மக்களைப் பார்த்தேன்.

பின்னர் நான் மட்டும் 1960-இல் திருச்சிக்குச் சென்று ஆயிரம் ரூபாய் முதலீட்டில் விறகு மண்டி தொடங்கினேன். அதில் இருந்து கொண்டே இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டேன்.1963 சூனில் திருச்சியில் தெப்பக்குளம் அருகில் தமிழ்நாடு தனிப்பயிற்சிக் கல்லூரி நிறுவனத்தைத் தொடங்கினேன். தனிப்பயிற்சிக் கல்லூரியை மிகத் திறமையாக நடத்தினேன். ஆனால் பெரும்பொருள் இழப்புக்கு ஆளானேன்.

1964 மார்ச்சு – ஏப்பிரலில் கொடிய வறுமையில் குடும்பம் அல்லாடியது. அப்போது மேலும் மூன்று மக்கள் – ஆ.வெற்றி, ஆ.வீரமணி, ஆ.அருட்செல்வி. அருட்செல்வி 2 அகவை குழந்தை; பசிக்கொடுமை தாங்காமல் ஈர மண்ணை எடுத்துத் தின்றார். நோய்வாய்ப்பட்டார்; அவளை 30.4.1964 பகல் திருச்சி தலைமை மருத்துவமனை யில் சேர்த்தோம். என் துணைவியார் சுசீசலா மட்டும் உடனிருந்தார்.

நான், 1.5.1964 காலை தொட்டியத்தில் நடைபெற இருந்த தி.க.தோழர் வீட்டுத் திருமண ஏற்பாட்டைச் செய்வதற்காகவும், அன்று மாலை அங்கு நடைபெற இருந்த பொதுக்கூட்ட ஏற்பாட்டைச் செய்வதற்காகவும் 30.4.1964 இரவே தொட்டியம் சென்றுவிட்டேன். என் மகள் அருட்செல்வி 30.4.1964 இரவு 8 மணிக்கு இறந்துவிட்டார். என் மனைவியும் மக்களும் உறையூரில் வீட்டில் கண்ணீரும் கம்பலையாகவும் இருந்தனர்.

1.5.1964 காலை 8 மணிக்குத் தொட்டியம் திருமண வீட்டை அடைந்த தந்தை பெரியார் என் மகள் இறந்து விட்ட செய்தியைச் சொல்லி, உடனே என்னை வீட்டுக்குப் போகச் சொன்னார். நான் 1.5.64 காலை 10.30 மணிக்கு என் மகளின் உடலைப் பார்த்தேன்; என் ஜென்னி சுசீலா அலறித் துடித்தார்.

இப்படிப்பட்ட இழப்புகள் பலவற்றை எதிர்கொண்டவர் என் ஜென்னி! அவர் இன்று இல்லை, அய்யகோ!’’

இவ்வாறு பெரியவர் ஆனைமுத்து பதிவு செய்துள்ளார்.

இன்றும் பெரியவர் ஆனைமுத்து கொள்கைகளில் பெரும் பணக்காரராகவும், பொருளாதாரத்தில் ஏழையாகவும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற வேட்கை மட்டும் அவரிடம் ஓயவில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்களின் முதல் வேலை என்ன? என்ற வினாவுக்கு அவரது விடை என்ன தெரியுமா?

‘‘நமது முதல் வேலை – அரசமைப்பு சட்டத்தில் உள்ளதை முழுவதுமாக அடைய வேண்டும். பட்டியல் வகுப்புகளுக்கும் பழங்குடிகளுக்கும் விகிதாச்சார இடப்பங்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்திய மக்கள் தொகையில் 57% உள்ளனர். அவர்களுக்கு 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை முழுவதுமாக, அதாவது 57% அளவுக்கு அடைவது தான் நம்முடைய வேலையாக இருக்க வேண்டும்’’ என்கிறார். அதுமட்டுமல்ல…. ‘‘ பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசமைப்பு சட்டத்தில் தங்களுக்குரிய பங்கை வாங்கும் வரை ஓயக்கூடாது. வாங்காதவன் மனிதனா?’’ என்றும் வினா எழுப்புகிறார்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனதற்கு காரணம் கலைஞரும், எம்.ஜி.ஆரும் தான் என்பது இவரது குற்றச்சாட்டு ஆகும். 50%க்கும் கூடுதலாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை தகர்க்க அவர்கள் இருவரும் தவறி விட்டனர். அதுமட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தங்களின் அரசியல் லாபத்துக்காக பல்வேறு உட்பிரிவுகளை சேர்த்து இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்தவர்கள் இருவரும் என்பதை அவர் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.

ஆனைமுத்து அய்யா அவர்களுக்கு வரும் 21-ஆம் நாள் 95 வயது நிறைவடைந்து 96-ஆவது வயது தொடங்குகிறது. ஆனாலும், அவரது உழைப்பு இன்றும் தொடர்கிறது. பெரியவர் ஆனைமுத்து தனி இயக்கம் நடத்தலாம்… பாட்டாளி மக்கள் கட்சி தனி இயக்கமாக இருக்கலாம். ஆனால், சமூகநீதியைப் பொருத்தவரை இரு இயக்கங்களின் கொள்கைகளும் ஒன்று தான். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து சமுதாயங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான் நமது முழக்கம். அதற்காகத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வருகிறது. பெரியவர் ஆனைமுத்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்குடன் நமது சமூகநீதி பயணம் தொடரும்! என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.