திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை
திமுக ஆட்சியில் செயல்படுத்த சாத்தியமில்லை என்று கூறிய மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேலம் மாவட்டத்திலுள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு பயனளிக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இத்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தால் மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி, ஓமலூர் ஆகிய நான்கு தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்டான்லி அணை சேலம் மாவட்டத்தில் தான் உள்ளது என்றாலும் கூட காவிரி ஆறாலும், அணையாலும் தங்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்ற எண்ணம் சேலம் மாவட்ட மக்களுக்கு இருந்து வந்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பப்படும். அந்த ஏரிகளைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அத்துடன் சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், அங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது.
அதேநேரத்தில் முதலமைச்சரின் அறிவிப்பு சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றாது. மேட்டூர் அணையின் உபரி நீரை திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். 5 இணைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இத்திட்டத்தை செயல்படுத்தினால், சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30,154 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும். அத்துடன் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுவதன் மூலம் 18,228 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரை காவிரி நீரை கொண்டு வர முடியும். அது அம்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2008-ஆம் ஆண்டு எனது தலைமையில் மேட்டூரில் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டார். இதுதவிர தமிழக சட்டப்பேரவையில் இத்திட்டத்திற்காக பத்துக்கும் மேற்பட்ட முறை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தீவிரமாக குரல் கொடுத்துள்ளார்.
மேட்டூர் உபரிநீர் திட்டம் சாத்தியமில்லை என்று முந்தைய திமுக ஆட்சியில் கூறப்பட்டு வந்த போதிலும், இது குறித்து விரிவாக ஆய்வு நடத்திய காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்து மறைந்த நீரியல் வல்லுனர் மோகனகிருஷ்ணன் பல முறை ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார். அண்மையில் தெலுங்கானாவில் தொடங்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய நீரேற்றுத் திட்டமான காலேஸ்வரம் திட்டம், குஜராத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சவுராஷ்டிரா நர்மதா பாசனத் திட்டம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மேட்டூர் உபரி நீர் திட்டம் எளிதாக செயல்படுத்தப்படக்கூடியதாகும். சேலம் மண்னின் மைந்தர் முதலமைச்சராக உள்ள காலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது தான் அவருக்கு பெருமையாகும்.
மேலும் படிக்க : “எல்லாம் வேஷம்! வெறும் வெற்று கோஷம்” திமுக பகுத்தறிவு பல்லிளிக்கிறதா ?
அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் இப்போது தமிழக அரசு நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அத்திக்கடவு & அவினாசி திட்டம் தொடங்கப்பட்டிருப்பதுடன், தடுப்பணைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நீர் மேலாண்மை இயக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அத்துடன் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். எனவே, அதற்கேற்ற வகையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை மாற்றி அமைத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும் படிக்க : இவர் நினைத்தால் திமுக பஸ்பம் ! மோடி இஸ் ஹவர் டாடி! அமைச்சர் பேச்சு!
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும் படிக்க : அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்