Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மருத்துவர் ராமதாஸ் கூறும் தீர்வு

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

கொரோனா பாதிப்பு காரணமாக வேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் விதமாக ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் பணப் புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது மட்டுமே தீர்வு எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள் வித்தியாசமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப் படுவதால் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்றிருந்த நிலை மாறி, இப்போது விவசாய வேலை கிடைக்காததால் 100 நாள் திட்டத்தில் வேலை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தின் காவிரி பாசனப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் அதிகாலையில் எழுந்து விவசாய வேலை தேடி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்வதாகவும், சில நேரங்களில் 15 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்ற பிறகு தான் வேலை கிடைப்பதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி பெரும் கவலை அளிக்கிறது. அந்த செய்தி உண்மையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் விசாரித்த போது தான் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த காவிரி பாசன மாவட்டங்களிலும் இதே நிலை நிலவுவதாக தெரியவருகிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் ஒருபுறம் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளும், ஒரு லட்சம் ஏக்கரில் தாளடி நடவுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் வேளாண் தொழிலாளர்களுக்கு போதிய அளவில் வேலை கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து இருப்பதால், வேளாண் பணிகளுக்கு தேவைக்கு அதிகமான தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். அதுமட்டுமின்றி வேளாண் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் எந்திரமயமாக்கப்பட்டு விட்டன. இவை உள்ளிட்ட காரணங்களால் தான் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வழக்கமாக காவிரி பாசன மாவட்டங்களில் நடவு, அறுவடை உள்ளிட்ட சாகுபடி காலத்தில் வேளாண் தொழிலாளர்களுக்கு அதிக தேவை இருக்கும். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 15 ஆண்டுகளில் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை தான் நிலவி வருகிறது. அந்த நிலைமை இப்போது தலைகீழாக மாறியிருப்பதற்கு காரணம் கொரோனா நோய் பரவலும், அதன் விளைவுகளும் தான். இதற்காக யாரையும் குறை கூற முடியாது. அதே நேரத்தில் வேளாண்மை சார்ந்த கூலித் தொழில்களை மட்டுமே நம்பியுள்ள கோடிக் கணக்கான ஏழைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அடிப்படை வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் தவிர்க்க முடியாத கடமையாகும்.

கிராமப்புற பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டால், அவற்றை மீட்பதற்கான ஒரே தீர்வாக திகழ்வது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தான். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் நிரந்தமான சொத்துகளை உருவாக்க முடிவதில்லை; வழக்கமாக வேளாண் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஊரக வேலைப் பணிகளுக்கு சென்று விடுவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்பது போன்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவது உண்மை தான். ஆனால், இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் பணப் புழக்கத்தை அதிகரித்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது மட்டுமே தீர்வு.

காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத சூழலில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக, கிராமப்புற வேலையின்மைக்கு சிறந்த தற்காலிகத் தீர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விவசாயத்திற்கும் நீட்டிப்பதன் மூலம் இனி வரும் காலங்களில் வேளாண் பணிகளுக்கு, அரசு மானியத்துடன் குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைப்பதையும், ஊரக வேலை உறுதித் திட்டம் பயனுள்ள திட்டமாக மாற்றப்படுவதையும் உறுதி செய்ய முடியும். அது இரு தரப்புக்கும் சிறந்த நீண்ட காலத் தீர்வாக அமையும் என நம்பலாம்.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் இப்போது நிலவும் வேளாண்மை சார்ந்த வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை நடப்பாண்டில் 200 நாட்களாக உயர்த்த வேண்டும்; அடுத்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்

Exit mobile version